இந்தோனேசியா: பெண்ணை கொன்று விழுங்கிய மலைப்பாம்பு

இந்தோனேசியாவில் மலைப்பாம்பு ஒன்று பெண்ணை கொன்று விழுங்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ஜகார்த்தா,
இந்தோனேசியாவில் மலைப்பாம்பு ஒன்று, பெண்ணை கொன்று உடலை முழுவதுமாக விழுங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜாம்பி மாகாணத்தை சேர்ந்த 50 வயதான ஜஹ்ரா என்கிற அந்த பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் அருகில் உள்ள ரப்பர் தோட்டத்துக்கு வேலைக்கு சென்றார். ஆனால் வேலை முடிந்து இரவில் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது கணவர் மற்றும் உறவினர்கள் ரப்பர் தோட்டத்துக்குள் அவரை தேடி சென்றனர்.
விடியவிடிய தேடியும் ஜஹ்ரா கிடைக்கவில்லை. அவர் மாயமான அடுத்த நாள் ரப்பர் தோட்டத்துக்கு அருகில் 16 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று, வயிறு வீங்கிய நிலையில் நகர முடியாமல் கிடந்தது. இதை பார்த்த ஜஹ்ராவின் உறவினர்கள் மலைப்பாம்பு அவரை கொன்று விழுங்கி இருக்குமோ என அச்சப்பட்டனர். எனவே அவர்கள் அந்த மலைப்பாம்பை அடித்து கொன்று பாம்பின் வயிற்றை கிழித்து பார்த்தனர். அப்போது பாம்பின் வயிற்றுக்குள் ஜஹ்ரா பிணமாக இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ந்துபோயினர்.
தோட்டத்தில் தனியாக இருந்த ஜஹ்ராவை மலைப்பாம்பு இறுக்கி கொன்று உடலை விழுங்கி இருக்கும் என நம்பப்படுகிறது. மலைப்பாம்பு மனிதர் களை கொன்று விழுங்குவது மிகவும் அரிதான ஒன்று என்றாலும், இந்தோனேசியாவில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது இது முதல் முறை அல்ல. கடந்த 2017 மற்றும் 2018க்கு இடையில் இப்படி 2 பேரை மலைப்பாம்புகள் கொன்று விழுங்கியுள்ளன.






