உங்கள் வேட்பாளருக்கு குற்றப் பின்னணி உள்ளதா என்பதை எப்படி அறிவது..? தேர்தல் ஆணையம் விளக்கம்


உங்கள் வேட்பாளருக்கு குற்றப் பின்னணி உள்ளதா என்பதை எப்படி அறிவது..? தேர்தல் ஆணையம் விளக்கம்
x

குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் அது குறித்து ஊடகங்கள் வழியாக 3 முறை மக்களுக்கு தகவல் வெளியிட வேண்டும் என தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடக்கிறது. இதை தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று வெளியிட்டார்.

மேலும் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விதிமுறைகளையும் தேர்தல் கமிஷன் வெளியிட்டு உள்ளது.

இதில் முக்கியமாக குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் அது குறித்து மக்களுக்கு விரிவான தகவல்களை வழங்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அதாவது தங்கள் மீதான வழக்குகள், அதற்கு பெற்ற தண்டனை விவரங்கள் போன்றவை குறித்து விரிவாக அறிவிக்க வேண்டும்.

இந்த அறிவிப்பை தங்கள் தேர்தல் பிரசார காலத்தில் 3 முறை செய்தித்தாள்கள் மற்றும் டி.வி. சேனல்கள் மூலம் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மக்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அதன்படி வேட்புமனு வாபஸ் பெற்ற முதல் 4 நாட்களுக்குள் ஒருமுறை, 5 முதல் 8-வது நாட்களுக்குள் ஒருமுறை, 9-வது நாளில் இருந்து தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளுக்கு (வாக்கெடுப்பு தேதிக்கு 2 நாட்களுக்கு முன்பு) இடையில் ஒருமுறை என 3 முறை குற்றப்பின்னணி விவரங்களை வெளியிட வேண்டும்.

உதாரணமாக, வேட்புமனு திரும்பப்பெறுவதற்கான கடைசி நாள் மாதத்தின் 10-ந் தேதியாகவும், வாக்குப்பதிவு 24-ந் தேதியாகவும் இருந்தால், முதலாவது அறிவிப்பை 11 மற்றும் 14-ந் தேதிக்கு இடையே வெளியிட வேண்டும்.

15 மற்றும் 18-ந் தேதிக்கு இடையே 2-வது அறிவிப்பையும், 19 மற்றும் 22-ந் தேதிக்கு இடையே 3-வது அறிவிப்பையும் வெளியிட வேண்டும் என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

இதைப்போல அந்த வேட்பாளரை களமிறக்கும் அரசியல் கட்சிகளும் அவர்களது குற்றப்பின்னணி விவரங்களை இணையதளங்கள் மற்றும் செய்தித்தாள், டி.வி. சேனல்கள் மூலம் வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளன.

இந்த நடவடிக்கைகள் மூலம் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பது குறித்து முழுமையாக அறிந்து கொள்ள முடியும் என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.


Next Story