'மைக்ரோசாப்ட்' நிறுவனமும் ஆள் குறைப்பு நடவடிக்கை: 11 ஆயிரம் ஊழியர்கள் நீக்க முடிவு


மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஆள் குறைப்பு நடவடிக்கை: 11 ஆயிரம் ஊழியர்கள் நீக்க முடிவு
x

கோப்புப்படம்

டுவிட்டர், அமேசான் நிறுவனங்களைத் தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஆள் குறைப்பு செய்கிறது. இந்த நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது என தகவல்கள் வெளியாகி அதிர வைத்துள்ளன.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் உலகின் பெரும்பணக்காரரான எலன் மஸ்க், டுவிட்டர் சமூக ஊடக நிறுவனத்தைக் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து செலவு குறைப்பு என்ற பெயரில் அந்த நிறுவனத்தில் ஆள் குறைப்பு நடவடிக்கை எடுத்தார். கடந்த ஆண்டில் அந்த நிறுவனம் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பியது.

அதைத் தொடர்ந்து சமூக ஊடக நிறுவனமான மேட்டா (பேஸ்புக் நிறுவனம்), இணைய வணிக நிறுவனமான அமேசான், தகவல் தொழில்நுட்ப நிறுவனமான எச்பி என பல நிறுவனங்கள் தொடர்ந்து ஆள் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இந்த நிறுவனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக செய்த ஆள் குறைப்பு நடவடிக்கைகள் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளன. இது, அந்த நிறுவனங்களின் ஊழியர்கள் மத்தியில் மனச்சோர்வையும், நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தி உள்ளது.

மைக்ரோசாப்ட் அதிரடி

இந்த நிலையில் அடுத்த அதிரடியாக முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனமும் உலகமெங்கும் உள்ள தனது பணியாளர்களில் 10 ஆயிரம் முதல் 11 ஆயிரம் வரையிலானோரை பணி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.

இது மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் 5 சதவீதம் ஆகும்.

இந்த தகவலை இங்கிலாந்தின் 'ஸ்கை நியூஸ்' நிறுவனம் வெளியிட்டுள்ளது. மோசமான பொருளாதார நிலை காரணமாக இந்த நடவடிக்கையை மைக்ரோசாப்ட் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் உலகமெங்கும் 2.21 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருவதாகவும், அமெரிக்காவில் மட்டுமே 1.22 லட்சம் ஊழியர்கள் உள்ளதாகவும், எஞ்சியவர்கள் உலகமெங்கும் உள்ள அதன் கிளை நிறுவனங்களில் பணியாற்றுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பின்னணி என்ன?

2019-ம் ஆண்டு டிசம்பரில் சீனாவில் தோன்றிய கொரோனா பெருந்தொற்று நோய் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவி, அங்கெல்லாம் தொடர் பொது முடக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக தொழில்கள், வணிகங்கள் முடங்கியதால் பொருளாதார வளர்ச்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

இதன் காரணமாக உலகளாவிய பொருளாதார மந்த நிலை ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஆள் குறைப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


Next Story