அயோத்தியில் இருப்பது பா.ஜ.க.வின் ராமர்.. கர்நாடக முன்னாள் மந்திரி பரபரப்பு பேட்டி


அயோத்தியில் இருப்பது பா.ஜ.க.வின் ராமர்.. கர்நாடக முன்னாள் மந்திரி பரபரப்பு பேட்டி
x
சித்தராமையாவுடன் ஆஞ்சனேயா
தினத்தந்தி 2 Jan 2024 7:02 AM GMT (Updated: 2 Jan 2024 9:07 AM GMT)

பா.ஜனதாவினர் கோவில்களை கட்டியது போதும். ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கும் பணிகளை செய்ய வேண்டும் என முன்னாள் மந்திரி ஆஞ்சனேயா கூறினார்.

பெங்களூரு:

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி ஆஞ்சனேயா சித்ரதுர்காவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முதல்-மந்திரி சித்தராமையாவை அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு அழைக்காதது நல்லதே. ஏனெனில் சித்தராமையா தனது பெயரில் ராமரை கொண்டுள்ளார். இவ்வாறு இருக்க அவர் எதற்காக அயோத்திக்கு சென்று அந்த ராமரை பூஜிக்க வேண்டும்? சித்தராமையாவின் சொந்த ஊரான சித்தராமனஹுன்டி கிராமத்தில் அவர் ராமர் கோவிலை கட்டியுள்ளார். அவர் அங்கு பூஜை செய்து வழிபடுவார்.

அயோத்தி கோவிலில் இருப்பது பா.ஜனதாவின் ராமர். அதனால் பா.ஜனதாவினரை அழைத்து பஜனை செய்கிறார்கள். ஆனால் எங்கள் ராமர் எல்லா இடங்களிலும் உள்ளார். எங்களின் இதயத்திலும் உள்ளார். நான் ஆஞ்சனேயா. ஆஞ்சனேயா என்ன செய்தார் என்பது உங்களுக்கு தெரியும் இல்லையா? எங்கள் சமூகத்தினர் ராமர், ஆஞ்சனேயா, ஹனுமந்தா என்று பெயரிடுகிறார்கள்.

அஞ்சனேயா எங்கள் சமூகத்தை சேர்ந்தவர். பா.ஜனதா மதங்களை பிரித்தாளும் கொள்கையை பின்பற்றுகிறது. ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக பேசி வாக்குகளை பெற பா.ஜனதா முயற்சி செய்கிறது. அவர்களின் ஆட்சியில் யாருக்கு பயன் கிடைத்தது? மத்திய பா.ஜனதா ஆட்சியில் இந்து இளைஞர்களுக்கு ஏதாவது நன்மைகள் ஏற்பட்டுள்ளதா?

பா.ஜனதாவினர் கோவில்களை கட்டியது போதும். ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கும் பணிகளை செய்ய வேண்டும். நாட்டில் பல இடங்களில் மிருகங்களைபோல் தகுதியற்ற இடங்களில் வாழ்கிறார்கள். அத்தகையோருக்கு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story