வேறு தொகுதியை தேடும் சித்தராமையாவுக்கு தோல்வி பயமா?


வேறு தொகுதியை தேடும் சித்தராமையாவுக்கு தோல்வி பயமா?
x
தினத்தந்தி 23 Feb 2023 6:45 AM GMT (Updated: 23 Feb 2023 6:45 AM GMT)

வேறு தொகுதியை தேடும் சித்தராமையாவுக்கு தோல்வி பயமா? என்று சட்டசபையில் எடியூரப்பா கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூரு,

யாராலும் தடுக்க முடியாது

கர்நாடக சட்டசபையின் கூட்டு மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாளில் இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் கலந்து கொண்டு உரையாற்றினார். அதைத்தொடர்ந்து கடந்த 17-ந் தேதி கர்நாடக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரின் 9-வது நாள் கூட்டம் நேற்று காலை விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதைத்தொடா்ந்து பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு பேசியதாவது:-மத்திய-மாநில பா.ஜனதா அரசுகளின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் தலித், பழங்குடியின மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நமது கட்சி எம்.எல்.ஏ.க்கள் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது.

போட்டியிட மாட்டேன்

சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைந்ததும் எம்.எல்.ஏ.க்கள் தங்களின் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். பா.ஜனதாவுக்கு பிரதமர் மோடியின் வலுவான தலைமை உள்ளது. அத்துடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் உள்ளன. இவை பா.ஜனதாவின் வெற்றியை உறுதி செய்யும்.இந்த சபைக்கு நான் வருவது இதுவே கடைசி ஆகும். நான் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன். ஆனால் பா.ஜனதாவை ஆட்சியில் அமர வைக்க நான் தொடர்ந்து பாடுபடுவேன். அதற்கான பலத்தை கடவுள் எனக்கு கொடுத்துள்ளார். பிரதமர் மோடி என்னை கவுரவமாக நடத்தியுள்ளார். எங்கள் கட்சி எனக்கு வாய்ப்பு வழங்கியதால் தான் நான் 4 முறை முதல்-மந்திரி ஆனேன். கட்சியில் எனக்கு கிடைத்த அளவுக்கு வாய்ப்புகள் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை.

சித்தராமையா பாராட்டுவார்

இதற்காக கட்சி தலைமைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மாநிலத்தின் நிதி ஆதாரங்கள், வரி வருவாய் ஆகியவற்றின் அடிப்படையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். கர்நாடகத்தின் பொருளாதார நிலை சீராக உள்ளது. இந்த பட்ஜெட்டை சித்தராமையா பாராட்டுவார் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவர் அவ்வாறு கூறாதது எனக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.இந்த நல்ல பட்ஜெட்டை எதிர்க்கட்சியினர் பரந்த மனப்பான்மையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பை விமர்சித்தால் தலைவராகி விடலாம் என்று சிலர் கருதுகிறார்கள். அத்தகையவர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைக்கும். சித்தராமையா வெற்றி பெற்ற தொகுதியை விட்டுவிட்டு வேறு தொகுதியை தேடுகிறார். அப்படி என்றால் அந்த தொகுதியில் வளர்ச்சி பணிகளை செய்யவில்லையா? அவருக்கு தோல்வி பயமா?. மீண்டும் அதே தொகுதியில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்ட வேண்டும். இவ்வாறு எடியூரப்பா பேசினார்.


Next Story