இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கியது ஏன்? ராகுல் காந்தி பேட்டி


இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கியது ஏன்? ராகுல் காந்தி பேட்டி
x

கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி நடந்து வரும் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கியது ஏன்? என ராகுல் காந்தி பேட்டியில் கூறியுள்ளார்.



சிம்லா,


காங்கிரஸ் கட்சி சார்பில் பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரிலான இந்திய ஒற்றுமை யாத்திரையானது கடந்த ஆண்டுசெப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது.

இதனை அக்கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதி மக்களவை எம்.பி.யான ராகுல் காந்தி தலைமையேற்று நடத்தி வருகிறார். இந்த யாத்திரையானது தமிழகத்தில் தொடங்கி, கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம், உத்தர பிரதேசம், டெல்லி மற்றும் அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் வழியே கடந்து சென்றுள்ளது.

இந்த யாத்திரையின்போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ராகுல் காந்தியுடன் ஒன்றாக பயணித்தனர்.

இந்த யாத்திரையானது தொடர்ந்து, பஞ்சாப்பில் நடந்தது. இதில், லூதியானாவில் கடந்த 14-ந்தேதி நடந்த யாத்திரையில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சந்தோக் சிங் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது பரபரப்பு ஏற்படுத்தியது.

இதனால், அன்றைய தினம் யாத்திரை ரத்து செய்யப்பட்டது. இதன்பின்னர், தொடர்ந்து யாத்திரை நடந்து வருகிறது. அதன்பின் கடந்த 16-ந்தேதி ஜலந்தர் நகரில் இருந்து மீண்டும் யாத்திரை தொடங்கியது.

தொடர்ந்து பஞ்சாப்பின் ஹோசியார்ப்பூர் பகுதியில் நேற்று காலை யாத்திரை தொடங்கி நடந்தது. இதில், ராகுல் காந்தியை திடீரென ஒருவர் ஓடி வந்து கட்டி பிடித்தது பரபரப்பு ஏற்படுத்தியது. உடனடியாக அருகே இருந்த கட்சி தொண்டர்கள் அவரை விலக்கி அப்புறப்படுத்தினர்.

இந்த நிலையில், அவரது யாத்திரை இமாசல பிரதேசத்தில் இருந்து இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு காத்கார் பகுதியில் உள்ள பிராசீன் சிவன் கோவிலில் ராகுல் காந்தி சாமி கும்பிட்டார். அவருடன் சமீபத்திய சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-மந்திரி சுக்வீந்தர் சிங் சுக்குவும் கோவிலுக்கு சென்றார்.

இதன்பின்பு காடோடா பகுதியில் இருந்து கடுமையான உறைபனிக்கு நடுவில் ராகுல் காந்தி தனது யாத்திரையை தொடங்கினார். அந்த குளிரிலும் கட்சி தொண்டர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

அவர் யாத்திரைக்கு புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியின்போது, இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்குவதற்கு முன்பு நாங்கள் நாடாளுமன்றத்தில் சில விவகாரங்களை எழுப்ப முயன்றோம்.

ஆனால், அவர்கள் எங்களை விடவில்லை. இந்தியாவின் நீதி துறை அல்லது ஊடகம் என எந்தவொரு அமைப்பின் வழியாகவும் எங்களால் விவகாரங்களை எழுப்ப முடியவில்லை.

அந்த அமைப்புகள் அனைத்தும், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளால் நெருக்கடியில் உள்ளன. அதனால், நாங்கள் கன்னியாகுமரியில் இருந்து யாத்திரையை தொடங்கி நடத்தி வருகிறோம் என்று கூறியுள்ளார்.




Next Story