இயற்கையான சரும நிவாரணிகள்..!


இயற்கையான சரும நிவாரணிகள்..!
x

டீன் ஏஜ் பெண்கள் பழங்களைத்தான், இயற்கை சரும நிவாரணியாக பயன்படுத்துகிறார்கள்.

எப்படி செயல்படுகிறது?

பழங்களில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை ஆக்ஸிஜனேற்றத்தின் நல்ல ஆதாரமாகவும் இருக்கிறது. பழங்களில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறமியைக் குறைக்கவும், தோல் அழற்சியைக் குறைக்கவும், தோல் திசுக்களை சரிசெய்யவும் உதவுகிறது. இதனால் சருமம் பொலிவு பெறுகிறது.

பழங்களுக்கு சருமத்தை பொலிவாக்கும் சக்தி உண்டு. பலவிதமான நவீன கிரீம்கள் சந்தையில் உலாவும் இந்த சூழலில், நிறைய டீன் ஏஜ் பெண்கள் பழங்களைத்தான், இயற்கை சரும நிவாரணியாக பயன்படுத்துகிறார்கள். அதிகம் சாப்பிடுகிறார்கள். அந்த பட்டியலில் பப்பாளி முன்னிலை வகிக்கிறது.

அதில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி ஆகிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவற்றுள் வைரஸ் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகள் நிரம்பியுள்ளதால் பருக்கள், தோல் அரிப்பு, புண்கள் போன்ற சரும பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது. தினமும் ஒரு கிண்ணம் பப்பாளி சாப்பிடுவது அல்லது அதை பேஸ் பேக்காக முகத்தில் போட்டுக்கொள்வது நல்ல பலனை கொடுக்கும்.

அதேபோல, ஆரஞ்சு பழத்திலும் சரும நலன்கள் நிறைந்திருக்கின்றன. அதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்திக்கு மட்டுமல்ல, சரும பொலிவிற்கும் பயன்படுகிறது. கொலாஜன் என்ற பொருளை இயற்கையாகவே நமது உடல் உற்பத்தி செய்கிறது. இது சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், வயதான தோற்றத்தை குறைக்க உதவுகிறது. ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியில் ஒருங்கிணைந்த பங்கு அளிக்கிறது.

பலரும் தக்காளியை காய்கறியாக நினைக்கிறார்கள். ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துக்களின் படியும் தக்காளி காய்கறியாக இருந்தாலும், தாவரவியல் ரீதியாக அது பழங்களின் குடும்பத்தைச் சார்ந்தது. தக்காளியில் லைகோபீன் நிறைந்திருக்கிறது. இது சருமத்தில் ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. செல் சேதத்தை எதிர்த்து போராடவும் செய்கிறது.

நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன. இவை சருமத்திற்கு மட்டுமல்ல, முடி மற்றும் கண்களுக்கும் நன்மை பயக்கும். நெல்லிக்காய் கொண்டு ஜாம், ஸ்மூத்தி, ஊறுகாய் செய்து சாப்பிடலாம். சாலட்டாக சாப்பிடுவதும் கூடுதல் பலன் கொடுக்கும்.

இவைமட்டுமின்றி வெள்ளரிக்காயும் சரும பொலிவை மீட்பதில் சிறந்தது. இது வைட்டமின் சி மற்றும் கே ஆகியவற்றோடு, அதிக அளவிலான நார்ச்சத்துக் களையும் கொண்டுள்ளது. அதிக நீர்ச்சத்தும் இருப்பதால், சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். சாலட், சாண்ட்விச் ஆகியவற்றில் வெள்ளரிக்காயை சேர்த்துக்கொள்ளலாம் அல்லது வெள்ளரிக்காயை துண்டுகளாகவோ, ஜூஸ் செய்தோ சாப்பிடலாம். வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களில் வைத்துக்கொண்டால் கருவளையங்கள் போன்ற பிரச்சினைகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம்.


Next Story