தலைக்குப்புற கார் கவிழ்ந்து 3 பேர் காயம்

பழனி அருகே கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் கந்தன் (வயது 28). இவரும், அவருடைய உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த கதிரவன் (44), தட்சிணா (16) ஆகியோரும் சொந்த வேலை காரணமாக நேற்று முன்தினம் ராமநாதபுரத்துக்கு காரில் சென்றனர்.
பின்னர் அவர்கள், இரவில் பொள்ளாச்சி நோக்கி காரில் திரும்பி கொண்டிருந்தனர். காரை, கந்தன் ஓட்டினார். பழனியை அடுத்த தாழையூத்து அருகே உடுமலை சாலையில் நேற்று அதிகாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. ஒரு கட்டத்தில், அந்த கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த 3 பேரும் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பழனி சாமிநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.