புதிய நெற்களம் அமைத்து தர வேண்டும்
வேதாரண்யத்தில் புதிய நெற்களம் அமைத்து தர வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் புதிய நெற்களம் அமைத்து தர வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தினர்.
ஒன்றியக்குழு கூட்டம்
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன் தலைமையில் நடந்தது. துணை தலைவர் அறிவழகன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜூ பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்டு கவுன்சிலர்கள் பேசியதாவது:- வேதாரண்யம் ஒன்றிய பகுதியில் சேதமடைந்துள்ள சாலைகளை உடனே சரி செய்ய வேண்டும். குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் நலன் கருதி புதிய நெற்களம் அமைத்து தர வேண்டும். கடந்த சில மாதங்களாக கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் சரியாக வராமல் உள்ளது. அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாதாந்திர விருப்பத்தொகை
மேலும் குறைந்த அழுத்த மின்சாரத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான பகுதிகளில் தெருவிளக்கு அமைத்து தர வேண்டும். தமிழக அரசு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ள மாதாந்திர விருப்பத்தொகையை ஒன்றிய கவுன்சிலருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.
நிதிநிலைக்கு ஏற்ப பாகுபாடு இல்லாமல் அனைத்து கோரிக்கைகளும் செயல்படுத்தப்படும் என்று ஒன்றிய தலைவர் கமலா அன்பழகன் கூறினார். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை நன்றி கூறினார்.