ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை மறுநாள் கொடியேற்றம்


ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை மறுநாள் கொடியேற்றம்
x

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.



திருவண்ணாமலை

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலுக்கு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். மேலும் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து கோவிலில் சாமி தாிசனம் செய்து விட்டு கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திக்கை தீப திருவிழா, ஆனி பிரம்மோற்சவம், ஆடிப்பூர பிரம்மோற்சவம் என பல்வேறு நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டிற்கான ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு காலையிலும், மாலையில் விநாயகர் உற்சவ உலா நடைபெற உள்ளது. தொடர்ந்து நாளை மறுநாள் காலை சுமார் 6 மணியில் இருந்து 7.30 மணிக்குள் உண்ணாமலை அம்மன் சன்னதியின் முன்பு உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தொடர்ந்து விழா நாட்களில் காலையும், மாலையும் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் உற்சவம் மாட வீதியுலா நடைபெறுகிறது. இந்த விழா வருகிற ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி வரை நடக்கிறது. 1-ந் தேதி காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், மாலையில் வளைகாப்பு உற்சவமும், பின்னர் பராசக்தி அம்மன் கோவில் வீதி உலாவும் நடைபெற உள்ளது.

அதனைத்தொடர்ந்து அன்று இரவு 12 மணிக்கு மேல் உண்ணாமலை அம்மன் சன்னதி முன்புறம் தீமிதி உலாவும், பின்னர் அம்மன் வீதியுலாவும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் அலுவலர்கள், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story