அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது - பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு


அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது - பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 26 Dec 2023 7:42 AM GMT (Updated: 26 Dec 2023 12:56 PM GMT)

அதிமுக இனி ஜெட் வேகத்தில் செயல்படும் என்று பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

அதிமுக பொதுச்செயலாளராக என்னை தேர்ந்தெடுத்த கட்சி தலைமை நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட கட்சி அதிமுக. உயிரோட்டம் உள்ள அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. தமிழ்நாட்டில் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி அதிமுக.

எதிரிகள் அஞ்சும் அளவுக்கு மதுரை மாநாட்டை நடத்தினோம். அதிமுக மாநாட்டால் மதுரை நகரமே குலுங்கியது. மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் 15 லட்சம் பேர் பங்கேற்றனர். அதிமுக மாநாட்டை பற்றி விமர்சனம் செய்ய உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதி இல்லை.

அளவு கடந்த சோதனை மற்றும் வெற்றியை பார்த்தது அதிமுகதான். எதிரிகளை சட்ட நுணுக்கத்தோடு கையாள வேண்டும். கைகோர்த்து செயல்பட்ட எதிரிகள், துரோகிகளை அதிமுக வென்று காட்டியது. அதிமுக இனி ஜெட் வேகத்தில் செயல்படும்.

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. திமுக ஆட்சியில் போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. போதைப்பொருள் விற்பனையை தடுத்து நிறுத்த திமுக அரசு தவறி விட்டது. திமுக அரசின் இறங்கு முகம் தொடங்கிவிட்டது. 520 தேர்தல் வாக்குறுதிகளையும் திமுக நிறைவேற்றவில்லை. நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு பின்னும் அமைச்சரை பதவி நீக்கம் செய்யாதது சரியில்லை.

நாடாளுமன்ற தேர்தலுக்குள் யார், யார் எங்கிருக்க வேண்டுமோ அங்கு இருப்பார்கள். கொரோனா தொற்று காலத்தில் அதிமுக சிறப்பாக செயல்பட்டது. அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகதான் வெற்றி பெறும். தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் 30 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தது அதிமுகதான்.

மழை நீரில் மூழ்கிய பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அம்மா உணவங்கள் மூடப்படுகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் தான் தென்மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சென்று பார்க்காமல் டெல்லியில் இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார்.

மக்கள் பாதிக்கப்படும்போது உதவ வேண்டும் என்பது மத்திய அரசின் கடமை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேவையான நிதியுதவியை மத்திய அரசு வழங்க வேண்டும். தமிழகம் கேட்கும் எந்த நிதியையும் மத்திய அரசு வழங்கியது இல்லை என்ற வரலாறு உள்ளது. மத்திய அரசை குறை சொல்லி திமுக அரசு தப்பிக்க முயற்சிக்கிறது. பேரிடரின்போது மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து உரிய நிதியை அதிமுக அரசு பெற்றது. மத்தியில் யார் ஆட்சி செய்தாலும் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்தான் நடத்துகிறார்கள்.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளது. பல்வேறு கருத்து வேறுபாடுகளுடன் இந்தியா கூட்டணி உள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.


Next Story