ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருமாள் சிலை கண்டெடுப்பு


ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருமாள் சிலை கண்டெடுப்பு
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்த பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது.

சிவகங்கை

சிவகங்கை அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்த பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது.

பெருமாள் சிலை

சிவகங்கை அருகே முற்காலபாண்டியர் காலத்தை சேர்ந்த ஒரு பெருமாள் சிலை சிதைந்த நிலையில் இருப்பதை பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன் மற்றும் சமயக்குமார் ஆகியோர் கண்டறிந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- பொதுவாக பாண்டியர்களின் ஆட்சிப்பகுதிகளான மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை போன்ற பகுதிகளில் முற்கால பாண்டியர்களின் தடயங்கள் பெருமளவு கிடைத்து வருகின்றன. அவற்றின் தொடர்ச்சியாக தற்போது சிவகங்கை வட்டத்திற்கு உட்பட்ட பொருசுபட்டியில் ஒரு பழமையான பெருமாள் சிலை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சிலை மூன்று துண்டுகளாக உடைந்து காணப்படுகிறது. மூன்றடி உயரம் கொண்ட சிலையின் தலையில் கிரீட மகுடம் தரித்தும், மார்பில் ஆபரணங்களும், முப்புரி நூலும் தெளிவாக இந்த புடைப்புச்சிற்பத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இடையில் இடைக்கச்சை கால்வரையிலும் செதுக்கப்பட்டுள்ளது. இரண்டு கால்களிலும் வீரக்கழலை அணிந்த படியும், கைகள் நான்கும் புஜங்களுக்கு கீழாக முற்றிலும் சிதைந்து காணப்படுகிறது. சிலையின் இடதுபுறம் ஒரு சங்கு தெளிவாக தெரிகிறது. வலதுபுறம் சக்கரம் சற்றே சிதைந்து காணப்படுகிறது.

ஆயிரம் ஆண்டுகள் பழமை

மேலும் முற்கால பாண்டியர்களுக்கே உரித்தான கலைநயத்துடன் இந்த சிலை நின்ற கோலத்தில் சிறப்பான முறையில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை பார்க்கும்போது இந்த பகுதியில் ஒரு பெருமாள் கோவில் இருந்திருக்க வேண்டும்.

பின்னாளில் அந்நிய படையெடுப்பினாலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அது அழிந்து போயிருக்கலாம். தற்போது இந்த சிலை வழிபாட்டில் இருந்துவருகிறது. மேலும் இந்த சிற்பம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story