அக்னிபத் திட்டத்தில் ராணுவத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்


அக்னிபத் திட்டத்தில் ராணுவத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
x

திருவள்ளூர் மாவட்டத்தில் அக்னி பத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இளைஞர்கள் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று 2023-2024-ஆம் ஆண்டுக்கான அக்னி பத் என்ற புதிய திட்டம் மூலம் இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் நடைபெறுவது குறித்து கூட்டம் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் சென்னை தலைமையிட இராணுவ ஆட்சேர்ப்பு இயக்குனர் கர்னல் எம்.கே. பாத்ரே முன்னிலையில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் இந்திய இராணுவத்திற்கு 2023-2024-ஆம் ஆண்டிற்கான ஆட் சேர்க்கும் புதிய முறை அக்னி பத் திட்டத்தின் மூலம் இராணுவத்தில் சேர விருப்பம் உள்ளவர்கள் 17 வயது முதல் 21 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் ஆண், பெண் இரு பாலினத்தவரும் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வரும் மார்ச் 15-ந் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இணையதள முகவரியில் விண்ணப்பிக்க தேர்வு கட்டணமாக ரூ.250 எஸ்.பி.ஐ மற்றும் இதர வங்கிகளின் இணைய வங்கி மூலம் செலுத்தலாம். அக்னி பத் திட்டமானது 2 கட்டங்களாக நடைபெற இருக்கின்றது. முதற்கட்டமாக பல்வேறு தேர்வு மையங்களில் கணினி அடிப்படையிலான எழுத்து தேர்வு நடத்தப்படும். முதற்கட்ட தேர்வில் தேர்வானவர்களுக்கு மட்டுமே 2-ம் கட்டமாக உடல் தகுதி தேர்வு நடத்தப்படும். தேர்வு மற்றும் உடல் அளவீடு சோதனை மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே 3-ம் கட்டமாக மருத்துவ பரிசோதனை செய்யப்படும்.

அக்னிபத் பொதுப்பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழில்நுட்ப பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தொழில்நுட்ப பணிக்கு ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10-ம் வகுப்புடன் 2 வருடம் ஐ.டி.ஐ பயின்றவர்களுக்கு 20 மதிப்பெண்களும், பத்தாம் வகுப்புடன் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் டிப்ளமோ பயின்றவர்களுக்கு 30 மதிப்பெண்களும், 12-ம் வகுப்புடன் ஒரு வருடம் ஐ.டி.ஐ பயின்றவர்களுக்கு 30 மதிப்பெண்களும், 12-ம் வகுப்புடன் 2 வருடங்கள் ஐ.டி.ஐ பயின்றவர்களுக்கு 40 மதிப்பெண்களும், 12-ம் வகுப்புடன் டிப்ளமோ பயின்றவர்களுக்கு 50 மதிப்பெண்களும் வழங்கி முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறும் நாளன்று ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்த அனுமதி அட்டையினை அவசியம் கொண்டு வர வேண்டும். மேலும் என்.சி.சி மற்றும் தேசிய அளவிலோ அல்லது மாநில அளவிலோ பங்கேற்று பதக்கம் பெற்றவர்களுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும். தகுதியின் அடிப்படையில் நேர்மையான முறையில் ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறும். திருவள்ளூர் மாவட்ட இளைய தலைமுறையினர் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

முன்னதாக அக்னி பத் திட்டம் மூலம் இந்திய ராணுவத்திற்கு ஆட்சேர்க்கும் முகாம் நடைபெறுவது குறித்து வாலிபர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் சென்னை தலைமையிட இராணுவ ஆட்சேர்ப்பு இயக்குனர் கர்ணல் எம்.கே. பாத்ரே விழிப்புணர்வு விளக்க படங்கள் மூலம் ஆட்சேர்ப்பு முகாமுக்கு விண்ணப்பிப்பது குறித்து செய்முறை விளக்கம் அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.


Next Story