ரெயில் நிலையங்களை மேம்படுத்த ஏற்பாடு


ரெயில் நிலையங்களை மேம்படுத்த ஏற்பாடு
x

பயணிகளுக்கு நவீன வசதிகளை வழங்கும் வகையில் ரெயில் நிலையங்களை மேம்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி

பயணிகளுக்கு நவீன வசதிகளை வழங்கும் வகையில், திருச்செந்தூர், தென்காசி ரெயில் நிலையங்களை மேம்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

புதிய திட்டம்

நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களை நவீனமயமாக்கும் வகையில், ரெயில்வே அமைச்சகம் 'அம்பித் பாரத் ஸ்டேஷன் திட்டம்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகிறது.

இதில் மதுரை ரெயில்வே கோட்டத்தில் அம்பை, புனலூர், திருச்செந்தூர், தென்காசி, கோவில்பட்டி உள்ளிட்ட ரெயில் நிலையங்களை அம்பித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தில் மேம்படுத்துவதற்கு ஆய்வு செய்ய மதுரை ரெயில்வே கோட்டம் சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

நவீன வசதிகள்

தற்போது மதுரை ரெயில்வே கோட்டம் சார்பில், கட்டிட வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தை இறுதி செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான காத்திருப்பு அறைகளை ஒன்றிணைத்து பயணிகளுக்கு நவீன வசதிகளை மேம்படுத்தி வழங்கவும், நல்ல சிற்றுண்டிச்சாலை உள்ளிட்ட சேவைகளை வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

மேலும் ரெயில் நிலையங்களில் வாகன நிறுத்துமிடங்கள், ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட பலகைகள், மேம்படுத்தப்பட்ட விளக்குகள், தேவையற்ற கட்டமைப்புகளை அகற்றுதல், சிறப்பு நடைபாதைகள், சாலைகளை விரிவுபடுத்தி மேம்படுத்தப்படும். இந்த ரெயில் நிலையங்களில் 24 ரெயில் பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நடைமேடை நீளம் அதிகரிக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள் செய்யப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story