கோவில்பட்டி புதிய பஸ் நிலையத்தில்இரவு நேர பஸ் சேவை ; அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
கோவில்பட்டி புதிய பஸ்நிலையத்தில் இரவு நேர பஸ் சேவையை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி (மேற்கு):
கோவில்பட்டி புதிய பஸ்நிலையத்தில் இரவு நேர பஸ் சேவையை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
இரவு நேர பஸ் சேவை
கோவில்பட்டி புதிய பஸ்நிலையத்தில் இருந்து அண்ணா பஸ்நிலையத்திற்கு இரவு நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று மக்களிடமிருந்து கோரிக்கை வந்ததையடுத்து, நேற்று கூடுதல் பஸ் சேவையை அமைச்சர் கீதாஜீவன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர், தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் சீனிவாசன், ம.தி.மு.க. நகர செயலாளர் பால்ராஜ், அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் வீறு காத்தான், கோட்ட மேலாளர் அழகர்சாமி, கிளை மேலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இயக்க நடவடிக்கை
தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், "கோவில்பட்டி மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. தினமும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை கூடுதல் பஸ்நிலையம் - அண்ணா பஸ்நிலையம் இடையே சர்குலர் பஸ் இயக்கப்படும். இந்த பஸ் ெரயில்வே நிலையம் வரை செல்லும்" என்றார்.
தொடர்ந்து கோவில்பட்டி நகராட்சி அலுவலக கூட்டரங்கில் குடிநீர் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் செந்தில் ராஜ், நகரசபை ஆணையாளர் கமலா மற்றும் குடிநீர் வழங்கல் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு குடிநீர் பிரச்சினை குறித்தும், குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் கூறுகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு என்பது, வரும் ஆனா வராது என்று தான் சொல்வேன். ஏனென்றால் எந்த ஒரு அடிப்படை செயலையும் செய்யாமல், மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யவில்லை. வரைமுறைப்படுத்தப்போகிறோம் என்கிறார்கள். கண் துடைப்புக்காக பா.ஜ.க. தேர்தலை நோக்கி இதை தாக்கல் செய்துள்ளனர்" என்றார்.