தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங் பிரிவு தொடக்கம்
வேலூர் தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் புதிதாக ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங் பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.
வேலூர் தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த கல்வியாண்டு முதல் புதிதாக ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங் பிரிவு (சான்ட்விச்) தொடங்கப்பட உள்ளது. இதற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த பாடப்பிரிவு 7 பருவங்களாக 3½ ஆண்டுகளுக்கு பயிற்றுவிக்கப்படும்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முன்னிலையில் மேன்டோ ஆட்டோ மொபைல் நிறுவனத்துடன் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர். இதில், 4-ம் மற்றும் 7-ம் பருவத்தில் மாணவர்களின் செயல்திறன் வலுப்பெற நேரடியாக தொழிற்கூடத்தில் செயல்முறை அனுபவம் பெற பயிற்சி அளிக்கப்படும்.
மாணவர்களுக்கு பயிற்சி காலத்தில் ஊக்கத்தொகையும் வழங்கப்படும். நான் முதல்வன் திட்டத்தின்படி இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, கல்விக்கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் மேன்டோ நிறுவனம் செலுத்துவதாக அறிவித்துள்ளது.இந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தரப்படும்.
இந்த தகவலை கல்லூரியின் முதல்வர் மேகலா தெரிவித்துள்ளார்.