போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் ஓசூர்: புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படுமா?-பொதுமக்கள், பயணிகள் எதிர்பார்ப்பு


தினத்தந்தி 24 Sept 2022 12:15 AM IST (Updated: 24 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செல்வ செழிப்புகள் நிறைந்த ஓசூர், தமிழக-கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ளது. தொழில் நகரமான இங்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது என பலமொழி பேசும் மக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சியாக இருந்த ஓசூர், தேர்வுநிலை பேரூராட்சி, நகராட்சி, தேர்வுநிலை நகராட்சியாக அடுத்தடுத்து தரம் உயர்த்தப்பட்டது. பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந் தேதி தமிழகத்தின் 13-வது மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.

போக்குவரத்து நெரிசலில் ஓசூர்

ஓசூரில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், கைக்கடிகாரம் மற்றும் குண்டூசி முதல் மிகப்பெரிய எந்திரங்கள் வரை தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. இதில் லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதுமட்டுமல்லாது, பட்டதாரிகள், பொறியாளர்கள் என ஏராளமானோர் அருகில் பெங்களூருவில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள்.

தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கடைகள் என நாளுக்கு நாள் ஓசூர் நகரம் வளர்ந்து வருகிறது. பிரம்மிக்க தக்க வகையில் தொழில் வளம் பெருகி வரும் ஓசூர் மாநகரில், இதற்கு இணையாக போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது.

வாகன போக்குவரத்து உயர்வு

அதாவது ஓசூரில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களில் பணி புரிந்து வருவோர் மற்றும் பெங்களூரு, கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள் ஓசூரில் வசிப்பதையே விரும்புகிறார்கள். இதனால் ஓசூரில் வாகன போக்குவரத்து நாளுக்கு, நாள் உயர்ந்து வருகிறது.

மேலும் சுற்று வட்டார கிராமங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பூக்கள் போன்றவையும் விற்பனைக்காக ஓசூருக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கிருந்து அவை வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால் சரக்கு மற்றும் கனரக வாகன போக்குவரத்தும் ஓசூரில் அதிகம் தான்.

பஸ் நிலையம் விரிவாக்கப்படுமா?

ஓசூர் நகரின் மையப்பகுதியில் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. மேலும் இங்கிருந்து பல்வேறு கிராமங்களுக்கு நகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதிகளவிலான பஸ்கள் வந்து செல்வதாலும், அதில் பயணிக்க லட்சக்கணக்கானோர் வருவதாலும் தினமும் பஸ் நிலைய பகுதி நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் பஸ் நிலையத்தில் தண்ணீர் தேங்கி குளம்போல் காணப்படுகிறது.

நெரிசலை தடுக்க பஸ் நிலையத்தை விசாலமான பகுதிக்கு இடமாற்றம் செய்து, அங்கிருந்து வெளியூர்கள், வெளி மாநிலங்களுக்கு பஸ்கள் இயக்க வேண்டும். தற்போதைய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து, இங்கிருந்து நகர பஸ்கள் மட்டும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள், பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுதொடர்பான திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story