தென்னை மரங்களில் கேரள வாடல் நோய் தாக்குதல்
உடுமலை பகுதியில் தென்னை மரங்களில் கேரள வாடல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
உடுமலை பகுதியில் தென்னை மரங்களில் கேரள வாடல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
அச்சம்
உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தற்போது நிலவி வரும் கூலி ஆட்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில் பலரும் தென்னை சாகுபடிக்கு மாறி வருகின்றனர். தேங்காய், இளநீர், கொப்பரை மற்றும் தேங்காய் மட்டைகளுக்கு உரிய விலை கிடைக்காத நிலை தொடர்கிறது. மேலும் தண்ணீர் பற்றாக்குறை, நோய் தாக்குதல் போன்றவையும் விவசாயிகளுக்கு பாதிப்பை உருவாக்குகின்றன.
அந்தவகையில் கடந்த சில காலங்களாக ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களால் தென்னை விவசாயிகள் மகசூல் இழப்பை சந்தித்து வருகின்றனர். இந்தநிலையில் கேரளாவின் பெரும் பகுதி தென்னை மரங்களில் கடும் இழப்பை ஏற்படுத்திய கேரள வாடல் நோய் உடுமலை பகுதியிலும் பரவியுள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மகசூல் இழப்பு
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
'உடுமலையையடுத்த ராவணாபுரம், கரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் கேரள வாடல் நோயின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளது. நோய் தாக்கிய மரங்களின் நடுப்பகுதி இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவதுடன், கீழ் நோக்கி வளைந்து காணப்படுகிறது. குருத்து அழுகல், பூங்கொத்து கருகுதல், மொட்டு உதிர்தல், வேர் அழுகல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மரங்கள் காய்க்கும் திறனை இழக்கின்றன.
அத்துடன் இந்த நோய் தத்துப்பூச்சி மற்றும் கண்ணாடி இறக்கைப்பூச்சிகளால் பரவும் தன்மை கொண்டது என்பதால் ஒருசில விவசாயிகள் பாதிக்கப்பட்ட மரங்களை வெட்டி அகற்றி விட்டார்கள். இந்த நோய் பரவலை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் பல்வேறு சிக்கல்களில் தவிக்கும் தென்னை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே கேரள வாடல் நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்',
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.