குடிநீர் திட்டப்பணிகளுக்காககிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
கிருஷ்ணகிரி மாவட்ட குடிநீர் திட்டப்பணிகளுக்காக கே.ஆர்.பி. அணையில் இருந்துதண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
குடிநீர் திட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் 15 ஊராட்சிகள், எண்ணேக்கொள் புதூர் மற்றும் 122 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்க ரூ.31 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆண்டு பராமரிப்பு செலவிற்காக ரூ.79 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறைந்தபட்ச தேவை நிதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் இந்த திட்டத்தின் கீழ் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் தவளம் கிராமம் அருகே 6 நீர்உறிஞ்சு கிணறுகள் அமைக்கப்பட உள்ளது இதில் 5 நீர்உறிஞ்சு கிணறுகள் ஆற்றின் தரைமட்ட அளவு வரை முடிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் திறப்பு
மேலும், ஆற்றின் தரை மட்டத்திற்கு மேல் 3½ மீட்டர் உயரத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நிலுவையில் உள்ளன. இந்த கிணறுகள் அமைக்கும் பணிகளுக்காக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் 43 அடியாக குறைக்கப்படுகிறது.
எனினும் இதனால் கிருஷ்ணகிரி அணையின் கீழ் முதல்போக பாசனத்திற்கும், குடிநீருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே குடிநீர் திட்டப்பணிக்காக கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டத்தை 43 அடியாக குறைக்க அரசாணை பெறப்பட்டு நேற்று முன்தினம் முதல் 9 நாட்களுக்குதண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 350 கனஅடியாக இருந்த நிலையில், அணையின் மொத்த உயரமான 52 அடியில் நேற்று 47.15 அடியாக நீர்மட்டம்இருந்தது.