பழுதடைந்த பள்ளி கட்டிடம் இடித்து அகற்றம்


பழுதடைந்த பள்ளி கட்டிடம் இடித்து அகற்றம்
x

கறம்பக்குடி அருகே பழுதடைந்த பள்ளி கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. விரைவில் அங்கு புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை

அரசு தொடக்கப்பள்ளி

கறம்பக்குடி அருகே ராங்கியன் விடுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 40 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடத்தில் இந்த பள்ளி செயல்பட்டு வந்தது. பள்ளி கட்டிடத்தில் ஆங்காங்கே வெடிப்புகள் இருந்தன. கஜா புயலின் போதே இந்த பள்ளி கட்டிடம் சேதமடைந்தது. இதனால் பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இடித்து அகற்றம்

இந்நிலையில் கடந்த மாதம் 26-ந் தேதி தீபாவளி முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு திரும்பிய நாளில் பள்ளி தொடங்குவதற்கு சற்றுநேரத்திற்கு முன்பு பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து கொட்டியது. மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து அங்கு ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளிடம் பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். மேலும் மாணவர்களுக்கு மாற்று இடத்தில் வகுப்புகள் நடைபெற்றன.

இதைதொடர்ந்து பெற்றோர்களின் கோரிக்கைக்கு ஏற்ப பழுதடைந்த அந்த பள்ளி கட்டிடம் இன்று பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

புதிய கட்டிடம் கட்ட வேண்டும்

இதுகுறித்து அப்பகுதி பெற்றோர்கள் கூறுகையில், பள்ளி வர்ணம் பூசப்பட்டு புது கட்டிடம் போல் தெரிந்தாலும் இடிந்து கொட்டிய வண்ணமே இருந்தது. இதனால் அச்சத்துடனே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினோம். தற்போது தற்காலிக ஏற்பாட்டில் மாணவர்கள் மாற்று இடத்தில் படித்து வருகின்றனர். எனவே விரைவில் புதிய பள்ளி கட்டிடத்தை கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்தனர்.


Next Story