வளர்ச்சி திட்ட பணிகள்


வளர்ச்சி திட்ட பணிகள்
x
தினத்தந்தி 23 March 2023 6:45 PM GMT (Updated: 23 March 2023 6:45 PM GMT)

குத்தாலம் பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டும் பணியையும், ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணியையும், வளம் மீட்பு பூங்காவில் மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரிக்கும் பணியையும் கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் குத்தாலம் அரசு ஆஸ்பத்திரி, பேரூராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் தூய்மை பணியாளர்கள் மூலம் குப்பை சேகரிக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டார். இதை தொடர்ந்து கலெக்டர் மகாபாரதி கூறுகையில், குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சி பஸ் நிலையத்தில் கழிவறை கட்டும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தி உள்ளேன்.

மஞ்சள் பை எந்திரம்

தூய்மை பணியாளர்களின் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரிக்கும் பணி, அரசு ஆஸ்பத்திரியில் தாய், சேய் உள் நோயாளிகள் பிரிவு, பெண்கள் உள்நோயாளிகள் பிரிவு, மருந்து பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.இதையடுத்து பொதுமக்கள் மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில பேரூராட்சி அலுவலகத்தில் ரூ.40 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள துணிப்பை விற்பனை எந்திரத்தை திறந்து வைத்துள்ளேன்.

பேரூராட்சியில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்றார். இந்த ஆய்வின் போது குத்தாலம் தாசில்தார் சரவணன், பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன், துணை தலைவர் சம்சுதீன், செயல் அலுவலர் ரஞ்சித், துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணியன், இளநிலை உதவியாளர் சுந்தர் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story