தலைவாசலில் பரபரப்பு:நாயும், பாம்பும் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு செத்தன-6 பேரை கடித்து குதறிய நாய் இறந்ததால் மக்கள் நிம்மதி
தலைவாசலில் நாயும், பாம்பும் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு செத்தன. 6 பேரை கடித்துக்குதறிய நாய் இறந்ததால் அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
தலைவாசல்:
6 பேரை கடித்த நாய்
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சித்தேரி அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தங்கம் (வயது 55). இவர், அந்த பகுதியில் நடந்து சென்ற போது நாய் ஒன்று அவரை கடித்து குதறியது.
இதேபோல் இன்னொரு ஆசிரியை அல்லிராணியையும் நாய் கடித்தது. இப்படியாக 6 பேரை அந்த நாய் கடித்து குதறியது. நாய் கடிபட்ட 6 பேரும் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாம்புடன் சண்டை
இந்த நிலையில் அந்த நாய் தெருவில் சுற்றி திரிந்த போது, பாம்பு ஒன்றும் சாலையில் சென்றது. பாம்பை கண்டதும் நாய் கடிக்க பாய்ந்தது. அப்போது பாம்பும், நாயும் சண்டையிட்டு ஒன்றுக்கொன்று கடித்துக் கொண்டன.
பாம்பு கடித்த நாய் இறந்த சிறிது நேரத்தில் அந்த பாம்பும் இறந்தது. அதனை அந்த பகுதி மக்கள் அப்புறப்படுத்தினர். இதற்கிடையே 6 பேரை கடித்துக் குதறிய நாய் இறந்ததால் அங்குள்ள மக்கள் நிம்மதி அடைந்தனர்.
இறைச்சி கழிவுகள்
அந்த பகுதியில் உள்ள இறைச்சி கழிவுகளை சாலையில் வீசி செல்வதால் அதனை நாய்கள் தின்றுவிட்டு சாலையில் செல்பவர்களை கடித்து குதறுகின்றன. எனவே நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இறைச்சி கழிவுகளை சாலையில் வீசுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.