காய்ந்துபோன தென்னை ஓலை, தேங்காய்கள்


காய்ந்துபோன தென்னை ஓலை, தேங்காய்கள்
x

காய்ந்துபோன தென்னை ஓலை, தேங்காய்கள்

திருப்பூர்

குடிமங்கலம்

குடிமங்கலம் பகுதியில் தென்னை மரங்களில் மர்ம நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

மர்ம நோய்

குடிமங்கலம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு தென்னை சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீப காலங்களாக தென்னை சாகுபடியில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது தென்னை மரங்களில் மர்ம நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கூலி ஆட்கள் பற்றாக்குறை நிலவி வரும் தற்போதைய சூழலில், அதற்கு தீர்வு காணும் வகையில் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை தென்னை சாகுபடியில் சராசரியாக ஒரு ஆண்டுக்கு ஒரு எக்டேரில் 13 ஆயிரம் தேங்காய்கள் காய்க்க வேண்டும். ஆனால் வெள்ளை ஈக்கள் தாக்குதல் உள்ளிட்ட பல காரணங்களால் காய்ப்புத்திறன் குறைந்துள்ளது.

விலை குறைவு

அதுமட்டுமல்லாமல் தேங்காய், கொப்பரை, தேங்காய் மட்டை, தேங்காய் தொட்டி உள்ளிட்ட தென்னை சார்ந்த அனைத்து பொருட்களும் விலை குறைந்துள்ளது. அதேநேரத்தில் பராமரிப்புச் செலவினங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் தென்னை விவசாயிகள் செய்வதறியாமல் தவிக்கும் நிலை உள்ளது.

அப்படிப்பட்ட சூழலில் குடிமங்கலத்தையடுத்த விருகல்பட்டி, அனிக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் தென்னை மரங்களில் மர்ம நோய் தாக்குதல் காணப்படுகிறது.இந்த நோய் தாக்குதலால் தென்னை மரங்களின் மட்டைகள் காய்ந்து கருகி வருகிறது. மேலும் தேங்காய்கள் சொறி பிடித்தது போல காட்சியளிக்கிறது. இதனால் காய்கள் தரமற்றதாக மாறி விடுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கபப்டும் நிலை உள்ளது. எனவே வேளாண் துறையினர் முழுமையாக ஆய்வு செய்து உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story