பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தம்


பேச்சிப்பாறை அணையில் இருந்து   உபரிநீர் திறப்பு நிறுத்தம்
x

பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறப்பது நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதியளிக்கப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி

குலசேகரம்:

பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறப்பது நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதியளிக்கப்பட்டு உள்ளது.

மழை

குமரி மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன் கடும் மழை பெய்தது. அதைத்தொடர்ந்து அணைகளுக்கு அதிக அளவு தண்ணீர் வந்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகள் வெள்ள அபாய அளவை கடந்தது.

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 46 அடியை நோக்கி சென்றது. அதைத்தொடர்ந்து வெள்ள அபாயத்தைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 6-ந்தேதி முதல் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் அதிக பட்சமாக வினாடிக்கு 4ஆயிரம் கன அடி தண்ணீர் பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து, 42 அடியை அன்று இரவு 10 மணிக்கு எட்டியது.

உபரிநீர் திறப்பு நிறுத்தம்

அதைத்தொடர்ந்து பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறப்பது நிறுத்தப்பட்டு, அணையின் மறுகால் மதகுகள் மூடப்பட்டன. இதனால் திற்பரப்பு அருவி மற்றும் ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்ததால், 4 நாட்களுக்கு பிறகு திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு நேற்று அனுமதிக்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

அணையின் நீர்மட்டம்

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 42 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1517 கன அடி தண்ணீர் வருகிறது. அணையின் பாசனக் கால்வாயில் வினாடிக்கு 281 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 73.35 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 535 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 575 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 12.60 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 12.69 அடியாகவும் இருந்தது. இதில் சிற்றாறு 1 அணைக்கு வினாடிக்கு 133 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மழை

குமரி மாவட்டத்தில் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் நேற்று அதிகாலையில் கன மழை பெய்தது. அதன்பிறகு வறண்ட வானிலையே நிலவியது.

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாலமோரில் 14.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.

மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பூதப்பாண்டி- 1.4, சிற்றார் 1- 4.6, பேச்சிப்பாறை- 2, பெருஞ்சாணி- 2.4, புத்தன்அணை -3, தக்கலை- 2.4, சுருளோடு- 5.4, திற்பரப்பு- 4.6 என பதிவாகி இருந்தது.

மழையின் காரணமாக மாவட்டத்தில் நேற்று ரப்பர் தோட்டங்களில் பால்வடிப்பு தொழில் பாதிக்கப்பட்டது.


Next Story