பெருகி வரும் டிஜிட்டல் தொழில்நுட்பம்...கேள்விக்குறியான ஓவியர்களின் வாழ்வாதாரம்...


பெருகி வரும் டிஜிட்டல் தொழில்நுட்பம்...கேள்விக்குறியான ஓவியர்களின் வாழ்வாதாரம்...
x

பெருகி வரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் ஓவியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

சேலம்

எடப்பாடி:

ஓவியக்கலை

கடந்த காலங்களில் கோவில்கள், அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், கடையின் முகப்பு பெயர் பலகைகள் அமைத்தல் உள்ளிட்டவற்றில் ஓவியர்களின் பங்கு அளப்பரியது. அவர்கள் தங்களது கற்பனை நயத்தால் வரையும் ஓவியங்கள், எழுதும் எழுத்துக்களுக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. இந்த ஓவியர்கள் தங்களது படைப்புகளை போட்டி போட்டி வெளிப்படுத்துவதும் உண்டு. இதனால் ஓவியம் சார்ந்த படிப்புகளும், அதனால் வேலைவாய்ப்புகளும் அதிகம் இருந்தன.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் டிஜிட்டல் தொழில்நுட்பம் மெல்ல மெல்ல தலைதூக்க தொடங்கியது. டிஜிட்டல் பேனர்கள், ஸ்டிக்கர் பிரிண்டிங் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களால் ஓவியக்கலை தனது இயல்பை மெல்ல மெல்ல இழந்து வருகிறது. ஓவியத்தையே நம்பியே தங்களது வாழ்க்ைகயை நடத்தி வந்த ஓவியர்களும் போதுமான வேலைவாய்ப்பு இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.

மாற்று தொழில்

குறிப்பாக விழா காலங்கள், தேர்தல் நேரங்கள், அரசியல் கட்சி நிகழ்ச்சிகள் நடைபெறும் நாட்களில் ஓவியர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்ட காலங்களும் உண்டு. இன்று டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் ஓவியர்களை தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான ஓவியர்கள், தங்களது கலையை மறைந்து மாற்று தொழிலுக்கு சென்று விட்டதாக தெரிகிறது. மீதமுள்ள ஓவியர்களும் தங்களுக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்தே ஒவ்வொரு நாளும் வலியுடன் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இதனால் ஓவியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

மும்மடங்கு கட்டணம்

தங்களது வாழ்க்கை நிலை குறித்து ஓவியர்கள் வேதனையுடன் தெரிவித்த கருத்துக்கள் விவரம் வருமாறு:-

ஆத்தூர் பகுதியை சேர்ந்த சேகர்:- ஒரு காலத்தில் சாப்பிட நேரம் இல்லாமல் வேலை பார்த்து வந்த ஓவியர்கள் அண்மை காலமாக சாப்பாட்டிற்கு என்ன செய்வது என்ற நிலையில் உள்ளனர். உடலாலும் மனதாலும் ஒன்றி செய்து வந்த இந்த வேலையை விட்டு போக மனம் இல்லாமலும், வேறு வழி தெரியாமலும் மிகுந்த சிரமப்பட்டு வருகிறோம், ஒரு சதுர அடி சுவர் விளம்பரத்திற்கு அனைத்து செலவுகளும் உட்பட ஓவியர்கள் 10 ரூபாய் மட்டும் கட்டணமாக பெற்று வருகிறோம். ஆனால் மும்மடங்கு கட்டணம் கொடுத்து டிஜிட்டல் தொழில்நுட்பதிலான பேனர்களை வாங்குவது ஏன் என்பது எங்களுக்கு புரியாத புதிராக உள்ளது.

எடப்பாடி பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன்:- கடந்த காலங்களில் வாகன பதிவு எண்களை கூட ஓவியர்களைக் கொண்டு அழகாக கையால் வரைந்து பயன்படுத்தி வந்த நிலை தற்போது மாறி விட்டது. அனைத்திலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் புகுந்து விட்டது. கோர்ட்டு உத்தரவை யாரும் பின்பற்றுவது இல்லை. ஓவியர்களின் வேலைவாய்ப்பை தட்டி பறிக்கும் வேலையை டிஜிட்டல் தொழில்நுபட்ம் செய்து வருகிறது. ஓவியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அனைத்து அரசு அலுவலகங்கள், அதுசார்ந்த அமைப்புகளின் பெயர் பலகைகள், திட்ட விவரங்களை ஓவியர்களை கொண்டே எழுத அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.

அரசு நிவாரணம்

சங்ககிரி பகுதியைச் சேர்ந்த முருகேசன்:- நான் எனது இளமைக் காலத்தில் இருந்து ஓவியம் வரைவது எனது உயிர் மூச்சாக கொண்டு இருந்து வருகிறேன். நான் மட்டுமல்லாமல் எனது மகன்கள் இருவரும் இந்தத் தொழிலை தான் செய்து வருகின்றனர். திடீரென தொழில்நுட்ப வளர்ச்சியால் அண்மை காலமாக ஓவியர்களுக்கான வேலை வாய்ப்பு பெருமளவு குறைந்துள்ளது. அரசு பொது கழிப்பிட வாயில்களில் உள்ள ஆண், பெண் உருவங்கள் கூட அண்மைக்காலமாக டிஜிட்டல் வடிவத்திலேயே இருப்பதே இதற்கு ஒரு உதாரணமாக கூறலாம். மதிப்புமிக்க பல ஓவியர்கள் இன்று சாலையோர புளிய மரங்களில் எண்களை எழுதவும், வீடுகளுக்கு வெள்ளையடிக்கும் பணி என பல்வேறு கடினமான பணிகளில் மனவேதனையுடன் ஈடுபட்டு வருகின்றனர். என் போன்ற நலிவடைந்த ஓவியக் கலைஞர்களின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு அரசு அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்.

எடப்பாடி பகுதியை சேர்ந்த உத்திரசாமி:- இந்த கலைநயமான தொழிலை நேசித்து செய்து வந்ததாலும், வேறு வேலை தெரியாத காரணத்தினாலும் தொடர்ந்து இந்த பணியை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளோம். புதிதாக ஓவியக்கலை தொழிலுக்கு வர யாரும் ஆர்வம் காட்டுவது இல்லை. அரசு பதிவு பெற்ற ஓவியர்களின் வாழ்வாதாரத்தினை காத்திடும் வகையில் அரசு சார்ந்த அனைத்து துறைகளிலும் விழிப்புணர்வு மற்றும் பொது அறிவிப்புகளை விளம்பரப்படுத்திட ஓவியர்களை பயன்படுத்திவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story