கோவை அருகே அதிசயம்-பசுவின் மடியில் பசியாறும் ஆட்டுக்குட்டிகள்
கோவை அருகே பசுவின் மடியில் ஆட்டுக்குட்டிகள் பசியாறின.
கிணத்துக்கடவு
நாம் கடந்து செல்லும் பாதையில் ஏதாவது ஒரு நிகழ்வு மட்டுமே நம்மை திரும்பி பார்க்க செய்யும். அந்த காட்சி நமது வாழ்க்கையில் ஒரு பாடத்தை கற்பித்து தரும். அப்படி ஒரு நிகழ்வுதான் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஒரு கிராமத்தில் நடந்துள்ளது.
ஆம்...பசி வந்தால் பத்தும் பறந்து விடும்....இது குழந்தைக்கு மட்டு அல்ல...ஆட்டு குட்டிகளுக்கும் பொருந்துமோ...? இந்த அதிசயமான சம்பவம் குறித்து பார்க்கலாம்:-
கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லியன்குட்டைபுதூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி குப்புச்சாமி (வயது 38) என்பவர் தனது வீட்டில் 7 மாடுகள் மற்றும் சில ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு குப்புசாமி வளர்த்து வந்த ஆடு 4 குட்டிகளை ஈன்றது. அப்போது ஆட்டின் மடியில் இருந்து போதியளவு பால் சுரக்கவில்லை. இதனால் குப்புசாமி ஆட்டுக்குட்டிகளின் பசியை போக்க தனது வீட்டில் வளர்த்து வந்த ஒரு பசு மாட்டின் பாலை பால் டப்பாவில் அடைத்து ஆடுகளுக்கு குடிக்க கொடுத்தார்.
இதையடுத்து அந்த ஆட்டுக்குட்டிகள் மாட்டின் பாலை குடித்து வளர்ந்தன. இந்த நிலையில் தற்போது ஆட்டுக்குட்டிகள் தானாக சென்று பசுமாட்டின் மடியில் பால் குடித்து பசியாற்றி வருகின்றன. அந்த பசுமாடும் ஆட்டுக்குட்டிகளை விரட்டி அடிக்காமல், பசியோடு வரும் ஆட்டுக்குட்டிகளை தான் ஈன்ற கன்றுக்குட்டிகள் போலஅரவணைத்து பால் கொடுத்து வருகிறது. இது அந்த பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தாய் உள்ளம் கொண்ட அந்த பசுமாட்டின் செயலை பொதுமக்கள் கண்டு பாராட்டி வருகின்றனர்.
இந்த அதிசய சம்பவம் குறித்து விவசாயி குப்புசாமி கூறியதாவது:-
முதலில் ஆட்டுக்குட்டிகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று தான் பசும்பால் கொடுத்தேன். பின்னர் ஆட்டுக்குட்டிகள் நடக்க ஆரம்பித்த நிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதுவாகவே சென்று பசுமாட்டின் பாலை குடித்து பசியை தீர்த்து கொள்கின்றன. ஆட்டுக்குட்டி பால் குடித்த பின்னரே மீதி இருக்கும் பாலை கரந்து வருகிறேன் என்றார்.