தமிழில் நான் எப்போதும் முதல் மாணவனாக வருவேன்: இலக்கிய விழாவில் அமைச்சர் பேச்சு
கல்வியை, நம் கலையை, இலக்கியத்தை மாணவர்களிடம், இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், தமிழில் மட்டும் தான் எப்போதும் முதல் மாணவனாக வந்ததாக உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
சென்னை இலக்கிய திருவிழா -2023ஐ முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான இலக்கிய போட்டிகள், பயிற்சி பட்டறைகள் தொடக்க விழா அண்ணாநகர் அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:-
சென்னை இலக்கிய திருவிழா 6-ந் தேதி (நாளை) முதல் 8-ந் தேதி வரை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் 100 இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில், பல்வேறு அமர்வுகளில் பங்குபெறுகிறார்கள்.
அக்கறையோடு இருக்கிறார்
தமிழகத்தின் கலை இலக்கிய வரலாற்றையும், நம் பண்பாட்டையும், அடுத்த தலைமுறையினரிடம் எடுத்துச்சென்று அவர்கள் மூலம் அதை உலகம் அறியச் செய்வதற்கான இந்த முயற்சி நிச்சயமாக வெற்றிபெறும்.
முதல்-அமைச்சர் கல்வியை, நம் கலையை, இலக்கியத்தை மாணவர்களிடம், இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதில் எவ்வளவு அக்கறையோடும், விடாப்பிடியாகவும் இருக்கிறார் என்பதற்கு இதுபோன்ற பல திட்டங்களை உதாரணங்களாக அடுக்கலாம்.
முதல் மாணவன்
பன்முகத்திறமை கொண்ட மிகப்பெரிய ஆளுமையான கருணாநிதி வழியில் வந்தவன். பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை வைத்துக்கொண்டு இதை சொல்கிறேன். நான் பள்ளியில் படிக்கும்போது எல்லா பாடங்களிலும் சராசரி மாணவன் தான்.
ஆனால், தமிழில் எப்போதும் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து வகுப்பில் முதல் மாணவனாக வருவேன். அதற்கு காரணம் கருணாநிதி. சிறுவயதில் இருந்தே அவரின் எழுத்துகளையும், முரசொலியையும் படித்து வளர்ந்ததால் இயல்பிலேயே தமிழார்வம் உண்டு.
சமூக பார்வை
நாங்களும் எங்களுடைய இளைஞர் அணி அலுவலகமான அன்பகத்தில் ஒரு சிறிய நூலகத்தை உருவாக்கி உள்ளோம். காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அந்த நூலகம் திறந்து இருக்கும். 4 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. ஆர்வம் உள்ள இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
அதேபோல் நான் சட்டமன்ற உறுப்பினராக உள்ள சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியிலும் ஒரு நடமாடும் நூலகம் அமைக்கும் பணியையும் முன்னெடுத்து வருகிறோம். தமிழகத்தின் பெருமைகளை இளம் தலைமுறைக்கு எடுத்து கூறுவதன் மூலம், நமது மண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என அவர்களை ஊக்கப்படுத்த கூடியதாக அமையும். அதுமட்டுமல்ல கலை-இலக்கியம் பெரும் சமூக பார்வையை உண்டாக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.