ரயான் துணி உற்பத்தி பாதிப்பு:விசைத்தறிகள் நிறுத்தப்பட்டதால் தொழிலாளர்கள் வேலை இழப்பு


ரயான் துணி உற்பத்தி பாதிப்பு:விசைத்தறிகள் நிறுத்தப்பட்டதால் தொழிலாளர்கள் வேலை இழப்பு
x

ரயான் துணி உற்பத்தி பாதிப்பால் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டதால் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனா்.

ஈரோடு

ரயான் துணி உற்பத்தி பாதிப்பு காரணமாக விசைத்தறிகள் நிறுத்தப்பட்டதால், தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.

வேலை இழப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள விசைத்தறிகளில் காட்டன் மற்றும் ரயான் துணிகளின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், தமிழக அரசின் விலையில்லா வேட்டி-சேலைகள், பள்ளிக்கூட சீருடைகளும் உற்பத்தி செய்யப்படுகிறது. ஈரோட்டில் உற்பத்தி செய்யப்படும் துணிகள் டையிங், பிளிச்சிங் செய்வதற்காக ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்தநிலையில் குஜராத்தில் டையிங் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதால், ஈரோட்டில் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் அனுப்பி வைக்கப்படாமல் குடோனில் தேக்கம் அடைந்து உள்ளது. அதனால் ரயான் துணிகளின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே விசைத்தறிகளும் நிறுத்தப்பட்டு உள்ளதால், தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.

டையிங் தொழில் பாதிப்பு

இதுகுறித்து விசைத்தறி உரிமையாளர்கள் கூறியதாவது:-

குஜராத் மாநிலத்தில் கழிவுநீர் வெளியேற்றம் தொடர்பாக பிரச்சினை இருப்பதால் டையிங் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. ராஜஸ்தான் உள்பட 5 மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், அங்கு துணிகளை அனுப்பி திரும்ப பெற முடியாத நிலை உள்ளது. எனவே டையிங் பணிகளுக்காக துணிகள் ஈரோட்டில் இருந்து அனுப்பி வைக்கப்படாமல் உள்ளது.

ஏற்கனவே உற்பத்தி செய்த பொருட்கள் தேங்கி இருப்பதால், புதிதாக உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே உற்பத்தியை நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான விசைத்தறிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story