தென்னை மரங்களில்சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறைகள்


தென்னை மரங்களில்சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறைகள்
x

நாமக்கல் மாவட்டத்தில் தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி விளக்கம் அளித்து உள்ளார்.

நாமக்கல்

சுருள் வெள்ளை ஈக்கள்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் தற்சமயம் தென்னை மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ எனும் பூச்சியின் தாக்குதல் ஒரு சில இடங்களில் காணப்படுகின்றது. இனிவரும் காலங்களில் அதிக வெப்பநிலை காரணமாக இப்பூச்சியின் தாக்குதல் அதிமாக வாய்ப்புள்ளது.

வயதில் முதிர்நத பெண் வெள்ளை ஈக்கள், மஞ்சள் நிற முட்டைகளை, சுழல் வடிவ அமைப்புகளில் ஓலைகளின் அடிப்பாகத்தில் இடுகின்றன. இம்முட்டைகள் மெழுகு பூச்சுடன் காணப்படும். முட்டைகளில் இருந்து வெளிப்படும் இளங்குஞ்சுகள், இலைகளின் அடிப்பரப்பில் இருந்து கொண்டு இலைகளின் சாற்றினை உறிஞ்சி வளர்கின்றன. சுமார் 20 முதல் 30 நாட்களில் முழு வளர்ச்சியடைந்த ஈக்களாக மாறி கூட்டம், கூட்டமாக தென்னை ஓலைகளின் அடிப்பகுதிகளில் காணப்படுகின்றன. இவைகள் காற்றின் திசையில் எளிதில் பரவி அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள தென்னை மற்றும் வாழை மரங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

குஞ்சுகளும், முதிர்ந்த ஈக்களும் தென்னை மற்றும் வாழைமரங்களின் ஓலைகளில் அடியில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதோடு, தேன் போன்ற திரவக் கழிவுகளையும் வெளியேற்றுவதால், கீழ்மட்ட அடுக்கில் உள்ள ஓலைகளின் மேற்பரப்பில் கரும்பூசணம் படர்ந்து காணப்படும். வெள்ளை ஈக்களானது, தென்னை மற்றும் வாழை மரங்களை தவிர இதர பயிர்களான பாக்கு, சப்போட்டா ஆகிய பயிர்களிலும் தாக்குதல் ஏற்படுத்துகிறது.

கட்டுப்படுத்தும் முறைகள்

டிராக்டர் மூலம் செயல்படும் நீர் தெளிப்பான்களை கொண்டு தாக்கப்பட்ட தென்னை மரங்களின் இலைகளின் மேல் வேகமாக நீரை அடிப்பதன் மூலம் வெள்ளை ஈக்கள் மற்றும் கரும் பூசணங்களை அழிக்கலாம். மஞ்சள் நிறம் வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையதால், மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களால் ஆன ஆமணக்கு எண்ணெய் தடவிய ஒட்டும் பொறிகளை ஹெக்டேருக்கு 20 என்ற எண்ணிக்கையில் 5 முதல் 6 அடி உயரத்தில் ஆங்காங்கே கட்டிவைத்து வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.

வெள்ளை ஈக்கள் அதிகளவு பரவும்போது பொறிவண்டுகள், என்கார்ஸியா ஒட்டுண்ணிகள் போன்ற இயற்கை எதிரிகள் தோப்புகளிலேயே இயற்கையாகவே உருவாக ஆரம்பிக்கும். என்கார்ஸியா ஒட்டுண்ணிகள் அதிக அளவு உருவாகி வெள்ளை ஈக்களின் சேதத்தை பெருமளவு குறைக்கின்றது. எனவே ரசாயன மருந்துகள் தெளிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

கிரைசோபெர்லா இரை விழுங்கிகள், தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை ஈக்களின் இளம் குஞ்சுகளை நன்றாக உட்கொள்வதால், தாக்கப்பட்ட தோட்டங்களில் ஹெக்டேருக்கு 1,000 என்ற எண்ணிக்கையில் கிரைசோபெர்லா இரைவிழுங்கிகளின் முட்டைகளை விட்டு வெள்ளை ஈக்களை அழிக்கலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் கிரைசொபெர்லா இரைவிழுங்கிகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே கிரைசோபெர்லா இரை விழுங்கிகள் தேவைப்படும் விவசாயிகள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story