எதையும் படிக்காமல் தெரிந்து கொள்ளாமல் குற்றச்சாட்டைக் கூறுவது எதிர்க்கட்சித் தலைவருக்கு அழகல்ல - அமைச்சர் பெரியகருப்பன்


எதையும் படிக்காமல் தெரிந்து கொள்ளாமல் குற்றச்சாட்டைக் கூறுவது எதிர்க்கட்சித் தலைவருக்கு அழகல்ல - அமைச்சர் பெரியகருப்பன்
x

எதையும் படிக்காமல் தெரிந்து கொள்ளாமல் குற்றச்சாட்டைக் கூறுவது அழகல்ல என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் பெரியகருப்பன் பதில் அளித்துள்ளார்.

சென்னை,

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வழக்கம்போல், கழக அரசைக் குறை கூற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இன்று கரும்பு கொள்முதல் பற்றி உள்நோக்கத்துடன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்து நான்கு பொங்கல் விழாக்களைக் கொண்டாடி இருக்கிறார்.

அப்போது கரும்பு வழங்கிட வெளியிட்ட அரசாணைகளை முழுமையாகப் படிக்காவிட்டாலும் அவற்றின் சாராம்சத்தையாவது தெரிந்து கொண்டோ தற்போது அறிக்கை வெளியிடுவதற்கு முன் நம் அரசு வெளியிட்ட அரசாணையாவது படித்திருந்தோ அல்லது படித்தவர்களிடம் தெரிந்து கொண்டோ இருந்திருக்கலாம். எதையும் படிக்காமல் தெரிந்து கொள்ளாமல் பொத்தாம் பொதுவாக ஒரு குற்றச்சாட்டைக் கூறுவது முன்னாள் முதல்வருக்கும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருக்கும் அழகல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் முதல்வராயிருந்த 2021 பொங்கலுக்கு கரும்பு (விவசாயிகளுக்கு வழங்கும் தொகை, வெட்டுக் கூலி, கட்டுக்கட்டும் கூலி, ஏற்றி இறக்கும் செலவு, போக்குவரத்துச் செலவு உட்பட) ரூ.30/- வழங்க ஆணையிடப்பட்டது. அப்போது விவசாயிகளுக்கு எவ்வளவு வழங்கப்பட்டது என்பது அவருக்குத் தெரியுமா? எதையுமே தெரிந்து கொள்ளாமல் அறிக்கை விடலாமா? இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் 2022-ம் ஆண்டு பொங்கலுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொகுப்பில் இடம்பெற்ற முழு நீளக் கரும்பிற்கு அரசால் ரூ.33 என நிர்ணயம் செய்யப்பட்டது. இது முந்தைய அதிமுக அரசு அறிவித்த ஒரு கரும்பின் கொள்முதல் விலையான ரூ.30-ஐ விட 10% அதிகமாகும்.

இதனைத் தொடர்ந்து 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசுத்தொகுப்பில் அறிவிக்கப்பட்டுள்ள முழு நீளக் கரும்பிற்கும் அரசால் ரூ.33 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவும் விவசாயிகளுக்கு வழங்கும் தொகையுடன் வெட்டுக் கூலி, கட்டுக்கட்டும் கூலி, ஏற்றி இறக்கும் செலவு போக்குவரத்து செலவு உள்ளிட்டவை சேர்ந்ததாகும். கரும்பு கொள்முதலுக்கு என்றுமில்லாத அளவிற்கு "எக்காரணம் கொண்டும் கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கொள்முதல் விலைக்கு குறைவாக விலை நிர்ணயம் செய்யப்படக் கூடாது, கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மின்னனுப் பரிமாற்ற முறையில் கரும்புக்கான தொகை செலுத்தப்பட வேண்டும்." என்பது உள்ளிட்ட தெளிவான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

கரும்பு விவசாயிகள் மனங்குளிர்ந்து முதல்வரை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பாராட்டைப் பொறுத்துக் கொள்ளாமல் ஆதாரமின்றி அறிக்கை விடுவதற்குப் பதில் சேலத்தில் உள்ள கரும்பு விவசாயிகளிடமாவது உண்மை நிலையைக் கேட்டறிந்து தெளிவு பெற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதுமட்டுமின்றி 2011 முதல் 2021 வரையான கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சிக்காலத்தில், 60,646.43 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டது. இக்காலகட்டத்தில் 16,80,054 புதிய உறுப்பினர்களுக்கு 8742.58 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், நம்முடைய முதல்-அமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற 21 மாத காலத்திலேயே 20,653.56 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. புதிய உறுப்பினர்களுக்கு 3027.86 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளதோடு 1,50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நன்மை செய்யும் அரசே மக்களுக்கான அரசு என்ற வகையில், திராவிட மாடல் அரசு எப்போதுமே மக்களுக்கான, விவசாயிகளுக்கான அரசுதான் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story