ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் அழுகிய நிலையில் பெண் பிணம்

ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் அழுகிய நிலையில் பெண் உடல் மீட்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் அழுகிய நிலையில் பெண் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
துர்நாற்றம்
ஈரோடு கொல்லம்பாளையம் வீட்டு வசதிவாரிய குடியிருப்பு தீபன் நகரில் தனியாருக்கு சொந்தமான டையிங் தொழிற்சாலை நீண்ட காலமாக செயல்படாமல் உள்ளது. இந்த ஆலையின் பின் பகுதியில் காலி இடம் உள்ளது. அந்த இடத்தில் இருந்து நேற்று கடுமையாக துர்நாற்றம் வீசியது.
இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுபற்றி ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அழுகிய நிலையில் பெண் உடல்
அப்போது அங்கு 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து அழுகிய நிலையில் கிடந்தார். ஆனால் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.
இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த பெண் இறந்து 7 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, இறந்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து அங்கு வீசிவிட்டு சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.