பூக்குழி இறங்கியும், தலையில் தீ கங்குகளை போட்டும் நேர்த்திக்கடன்


சாயல்குடி அருகே நடந்த மதநல்லிணக்க பூக்குழி திருவிழாவில் பூக்குழி இறங்கியும், தலையில் தீ கங்குகளை போட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

சாயல்குடி அருகே நடந்த மதநல்லிணக்க பூக்குழி திருவிழாவில் பூக்குழி இறங்கியும், தலையில் தீ கங்குகளை போட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நேர்த்திக்கடன்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பெரியகுளம் கிராமத்தில் முகரம் பண்டிகையையொட்டி மதநல்லிணக்க பூக்குழி திருவிழா நடைபெற்றது. முகரம் பண்டிகையை முன்னிட்டு ஏராளமானோர் விரதம் இருந்தனர்.

10-ம் நாள் திருவிழாவாக நேற்று அதிகாலை பூக்குழி திருவிழா நடந்தது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு ஆண்கள் பூக்குழி இறங்கியும், பெண்கள் தலையில் தீ கங்குகளை போட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விழாவுக்கான காரணம்

இந்த விழா குறித்து பெரியகுளம் கிராமத்தினர் கூறியதாவது:-

பெரியகுளம் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு அசனார், உசேனார், மாமுனாச்சி ஆகிய உடன் பிறந்த சகோதர சகோதரி இருந்தனர். இந்தநிலையில் ஒரு கலவரத்தில் அசனார், உசேனார் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து சகோதரியான மாமுனாச்சியும் தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.

சிறிது காலம் கழித்து பெரியகுளம் பகுதியில் காலரா பரவி பலர் இறந்தனர். இந்தநிலையில் அந்த கிராமத்தில் பெரியவர் ஒருவர் கனவில் தலையில் முக்காடு அணிந்த பெண் தோன்றி, பரவி வரும் நோய் குணமாக வேண்டுமானால் இறந்த 3 பேரை வணங்குவதுடன், பூக்குழி இறங்கினால் நோய் குணமாகும் என்று கூறியுள்ளார். அவ்வாறு ஊர்மக்கள் வழிபட்டதால் நோயில் இருந்து குணமாகினர். அந்தகாலம் தொட்டு தொடர்ந்து இந்த திருவிழா நடந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நிகழ்ச்சியில் பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Next Story