தைப்பூசத்தையொட்டி திண்டல் முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


திண்டல் முருகன் கோவிலில் தைப்பூசத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஈரோடு

திண்டல் முருகன் கோவிலில் தைப்பூசத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தைப்பூச விழா

ஈரோடு திண்டலில் மிகவும் பிரசித்தி பெற்ற வேலாயுதசாமி (முருகன்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி நேற்று தைப்பூச விழா கோலாகலமாக நடைபெற்றது.

தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் முருகனுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள் உள்பட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து வள்ளி, தெய்வானையுடன் சமேத வேலாயுதசாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

காவடி எடுத்து...

இதையொட்டி பக்தர்கள் காவடி எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதிகாலை முதலே ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசனம் செய்தனர். பெண்கள் பலர் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

இதேபோல் ஈரோடு பாப்பாத்திக்காடு பாலமுருகன் கோவிலும் நேற்று தைப்பூச விழா நடந்தது. இதையொட்டி பாலமுருகனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையொட்டி பாலமுருகன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் ஈரோடு கருங்கல்பாளையம் சுப்பிரமணியசாமி கோவில், காசிபாளையம் பாலமுருகன் கோவில், பார்க்ரோடு முருகன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


Next Story