ஏற்றி சென்ற எந்திரம் மின் கம்பியில் சிக்கி லாரி மீது டிரான்ஸ்பார்மர் விழுந்தது - போக்குவரத்து பாதிப்பு


ஏற்றி சென்ற எந்திரம் மின் கம்பியில் சிக்கி லாரி மீது டிரான்ஸ்பார்மர் விழுந்தது - போக்குவரத்து பாதிப்பு
x

கும்மிடிப்பூண்டி அருகே டிரைலர் லாரியில் ஏற்றி சென்ற எந்திரம் மின் கம்பியில் சிக்கி டிரான்ஸ்பார்மர் லாரி மீது விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

திருவள்ளூர்

சென்னையில் இருந்து உத்தரபிரதேசத்தை சேர்ந்த டிரைவர் சோனுமிஸ்ரா (வயது 32) என்பவர் டிரைலர் லாரியில் ராட்சத எந்திரத்தை ஏற்றிக்கொண்டு ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த லாரி, நேற்று அதிகாலை கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை வழியாக ஆந்திர மாநிலம் சத்யவேடு நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது பொம்மாஜிகுளம் அருகே டிரைலர் லாரி செல்லும் போது, லாரியில் ஏற்றப்பட்டிருந்த உயரமான எந்திரம் சாலையின் குறுக்கே சென்ற மின் கம்பிகள் மீது சிக்கியது. இதை கவனிக்காமல் டிரைவர் லாரியை தொடந்து இயக்கியதால் மின் கம்பிகள் இணைக்கப்பட்டிருந்த டிரான்ஸ்பார்மரும் லாரியின் மீது சாய்ந்து விழுந்தது.

இந்த விபத்தின் போது டிரான்ஸ்பார்மரில் இணைக்கப்பட்டிருந்த மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியதால் 'ஸ்ட்' ஆகி மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. எனவே லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விபத்துக்குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் பாதிரிவேடு போலீசார் மற்றும் மின் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் லாரியின் மேல் விழுந்து கிடந்த டிரான்ஸ்பார்மரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே கவரைப்பேட்டை- சத்யவேடு சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.


Next Story