

ஆவுடையார்கோவிலில் ஆத்மநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மாணிக்கவாசகர் சுவாமி மார்கழி திருவாதிரை திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று மாலை மாணிக்கவாசகர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனிதநீர் நிரப்பிய 108 சங்குகள் மூலம் சங்காபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து இரவு வெள்ளி இடப வாகனத்தில் குருத்தோலை சப்பரத்தில் சிவபெருமான் அலங்காரத்தில் மாணிக்கவாசகர் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தேரோட்டமும், 5-ந் தேதி வெள்ளிரதத்தில் மாணிக்கவாசகர் வீதி உலாவும் நடைபெறும். 6-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் உபதேச காட்சி நடைபெற உள்ளது. சங்காபிஷேக விழாவில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகாசந்நிதானம் அம்பலவாண தேசிகபரமாச்சாரியார் கலந்து கொண்டார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.