மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் குடமுழுக்கு


மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் குடமுழுக்கு
x
தினத்தந்தி 4 Sept 2023 12:15 AM IST (Updated: 4 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் குடமுழுக்கு 18 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடந்தது.

மயிலாடுதுறை


மயிலாடுதுறை மாயூரநாதர் கோவில் குடமுழுக்கு 18 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடந்தது.

மாயூரநாதர் கோவில்

மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு அம்மன் மயில் உருவில் இறைவனை பூஜித்ததாக புராண வரலாறு கூறப்படுகிறது. இந்த கோவில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரால் தேவாரப்பாடல் பெற்றதலம் ஆகும். 160 அடி உயரத்தில் 9 நிலை கொண்ட ராஜகோபுரத்துடன் 8 ஏக்கரில் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இக்கோவில் குடமுழுக்கு 18 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்தது.

யாக சாலை பூஜைகள்

முன்னதாக யாக சாலை பூஜைகள் நடந்தது. நேற்று அதிகாலை 8-ம்கால யாகசாலை பூஜை திருவாவாடுதுறை ஆதீனம் அம்பலவான தேசிக பரமாசாரிய சாமிகள் முன்னிலையில் தொடங்கியது. அப்போது சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து பூர்ணாகுதி மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்களை யாகசாலையில் இருந்து மேளதாளம், சிவ கைலாய வாத்தியங்கள் முழங்க வான வேடிக்கைகளுடன் சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து விமான கும்பங்களை சென்றடைந்தனர்.

குடமுழுக்கு

தொடர்ந்து விமான கலசங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சரியாக காலை 7.40 மணிக்கு சாமி, அம்பாள் சன்னதிகள், 160 அடி உயர ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களுக்கு சிவாச்சாரியார்களால் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. பின்னர் மாயூரநாதர் மற்றும் அபயாம்பிகை மூலஸ்தானத்தில் குடமுழுக்கு நடந்து சாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.

விழவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குடமுழுக்கையொட்டி பாதுகாப்பு பணிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா, திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story