காமராஜர் சிலைக்கு நாடார் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை
பிறந்த நாள் விழாவையொட்டி காமராஜர் சிலைக்கு நாடார் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாலை அணிவித்து மரியாதை
பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்த நாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்திலும் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜரின் முழு உருவ சிலைக்கு பெரம்பலூர் மாவட்ட நாடார் உறவினர் முறை சங்கத்தின் பொதுச்செயலாளர் தினகர் தலைமையில், சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
இதில் சங்கத்தின் பொருளாளர் பால்ராஜ், செயலாளர் முருகேசன், இணை செயலாளர் அழகேசன் மற்றும் சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் வரதராஜன், பொதுச்செயலாளர் செல்வகுமார், துணை தலைவர் சரவணன், துணை செயலாளர் கதிரேசன், நிர்வாக குழு உறுப்பினர் பிரபு, மருத்துவ ஆலோசகர் மோகன் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் சங்கத்தின் சார்பில் பெரம்பலூர் சங்குபேட்டை, முத்துநகர், கடைவீதி ஆகிய பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, எழுது பொருட்கள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டன.
பேச்சு, கட்டுரை போட்டிகள்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகள், தனியார் பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. பள்ளிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜரின் உருவப்படத்திற்கு மாணவ-மாணவிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
காமராஜர் பிறந்த நாளையொட்டி மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் பற்றிய பேச்சு போட்டி, கட்டுரை, ஓவியம், மாறுவேடம், பாட்டு போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.