வாகன நெரிசலில் தத்தளிக்கும் திண்டுக்கல்லில் புறநகர் பஸ் நிலைய கனவு நிறைவேறுமா?


வாகன நெரிசலில் தத்தளிக்கும் திண்டுக்கல்லில் புறநகர் பஸ் நிலைய கனவு நிறைவேறுமா?
x

வாகன நெரிசலில் தத்தளிக்கும் திண்டுக்கல்லில் புறநகர் பஸ் நிலைய கனவு நிறைவேறுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

திண்டுக்கல்

பூட்டுக்கு புகழ்பெற்ற திண்டுக்கல், தென்தமிழகத்தின் நுழைவு வாயிலாக அமைந்து உள்ளது. இதனால் ரெயில், பஸ்கள், சரக்கு வாகனங்கள் உள்பட அனைத்து வகையான வாகனங்களின் போக்குவரத்தும் இங்கு அதிகம்.

திண்டுக்கல் பஸ் நிலையம்

திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் காமராஜர் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இது, சுமார் 6½ ஏக்கர் பரப்பளவு கொண்டது. திண்டுக்கல்லில் இருந்து சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை, நெல்லை என்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.இதேபோல் திருவனந்தபுரம், பெங்களூரு போன்ற பிற மாநிலங்களின் பெருநகரங்களுக்கு திண்டுக்கல் வழியாக பஸ்கள் செல்கின்றன. இதுதவிர திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள சிறு நகரங்கள், கிராமங்களுக்கும் அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

20 ஆயிரம் பேர்

அந்த வகையில் திண்டுக்கல் பஸ் நிலையத்திற்கு தினமும் 800-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இதன்மூலம் உள்ளூர், வெளியூர் பயணிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் என தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பஸ் நிலையத்தில் குவிகின்றனர்.இதனால் இரவு, பகல் என்று 24 மணி நேரமும் திண்டுக்கல் பஸ் நிலையம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்த பரபரப்பு சமீபகாலமாக நெரிசல், நெருக்கடியாக உருமாறி வருவதை யாரும் மறுக்க முடியாது. இதற்கு மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப வசதிகளை மேம்படுத்த போதிய இடவசதி இல்லாததே காரணம் ஆகும்.

இடப்பற்றாக்குறை

பஸ்சுக்காக காத்திருக்கும் நேரத்தில் பயணிகள் அமருவதற்கு இருக்கைகள் அமைப்பதற்கு கூட வசதி இல்லை. இதேபோல் ஒவ்வொரு ஊருக்கு செல்லும் பஸ்களை நிறுத்த தனித்தனி நிறுத்துமிடங்கள் உள்ளன. அதுவும் ஒன்றிரண்டு பஸ்களை மட்டுமே நிறுத்தும் அளவுக்கு உள்ளது. இதனால் பஸ் நிலையத்தில் குறுக்கும், நெடுக்குமாக பஸ்சை நிறுத்தும் அவலமும் நீடிக்கிறது. மேலும், சில நேரங்களில் பஸ்களை நிறுத்த இடமில்லாமல் அரசு பஸ்களை பணிமனைகளிலும், தனியார் பஸ்கள் சாலைகளிலும் நிறுத்தும் நிலை ஏற்படுகிறது. இதேபோல் 6 நுழைவுவாயில்களை, 4 ஆக மாற்றப்பட்டும் பஸ் நிலையத்தை ஒழுங்குப்படுத்த முடியவில்லை.

போக்குவரத்து நெரிசல்

அதோடு பஸ் நிலையத்தில் உள்ளே நிலைமை இப்படி என்றால், வெளியே அதைவிட பரிதாபம். பஸ் நிலையத்தை சுற்றிலும் இருக்கும் ஓட்டல்கள், விடுதிகள், வணிக நிறுவனங்களுக்கு வருபவர்கள் கார், மோட்டார் சைக்கிளை சாலையில் நிறுத்துகின்றனர். மேலும் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், மினி வேன்கள், பஸ் நிலையத்தை சுற்றிலும் உள்ள சாலைகளில் நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ் நிலையம் மட்டுமின்றி ஸ்கீம் சாலை, ஏ.எம்.சி.சாலை, திருவள்ளுவர் சாலை என வெளிப்பகுதியும் நெரிசல் பகுதியாக மாறிவிட்டது.

அதுமட்டுமின்றி பஸ்கள் வந்து செல்லும் முக்கிய சாலைகளான பழனி சாலை, நத்தம் சாலை, மதுரை சாலை, மெங்கில்ஸ் ரோடு, திருச்சி சாலை, சத்திரம் சாலை ஆகியவை ஆக்கிரமிப்புகளால் குறுகிவிட்டன. இந்த சாலைகளில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் என தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் நகருக்குள் உலாவருகின்றன. அதுபோதாதென்று, வணிக நிறுவனங்களுக்கு வரும் சரக்கு வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன.

இதனால் போட்டிபோட்டு முந்தி செல்ல முயற்சிக்கும் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள், அலுங்காமல் செல்லும் கார்கள், சாலையை மறைக்கும் சரக்கு வாகனங்களுக்கு நடுவே தான் பஸ்கள் செல்ல வேண்டியது இருக்கிறது. இதனால் நகரில் முக்கிய சாலைகளில் அடிக்கடி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

புறநகர் பஸ் நிலையம் அமையுமா?

இந்த நெரிசலால் காலை, மாலை நேரங்களில் திண்டுக்கல் நகரமே தத்தளித்து வருகிறது. பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். ஒருசிலநேரம் ஆம்புலன்ஸ்கள் கூட விரைவாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அனைத்து தரப்பு மக்களும் போக்குவரத்து நெரிசலால் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த நெரிசல் இல்லாமல் மக்கள் பயணம் செய்வதற்கு நகர சாலைகள் அனைத்தையும் அகலப்படுத்த வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதேபோல் வெளிமாவட்ட பஸ்கள் நின்று செல்வதற்கு நகருக்கு வெளியே புறநகர் பஸ் நிலையம் திறக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் நீண்டகால கனவாக இருக்கிறது.

வெளிமாவட்ட பஸ்கள் நகருக்குள் வராமல் இருந்தாலே வாகன நெரிசல் பெருமளவில் குறைந்து விடும். அதை கருத்தில் கொண்டு புறநகர் பஸ்நிலையம் அமைக்க பல முறை இடம் தேர்வு நடைபெற்றது. எனினும் இதுவரை பஸ்நிலையம் அமைக்கப்படாததால் மக்கள் ஏமாற்றத்தில் இருக்கின்றனர். இதனால் தினந்தோறும் மக்கள் நெரிசலில் தவித்து வருகின்றனர். திண்டுக்கல்லின் அடையாளமாக மாறிவரும் நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படுமா? என மக்கள் காத்திருக்கின்றனர்.


Related Tags :
Next Story