'பனை விதைகள் நடவு செய்ய இது சரியான தருணம்'


பனை விதைகள் நடவு செய்ய இது சரியான தருணம்
x
திருப்பூர்


பனை விதைகள் நடவு செய்வதற்கு இது சரியான தருணமாக இருக்கும் என்று குடிமங்கலம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியுள்ளார்.

எரிபொருளான மரங்கள்

மண் அரிப்பைத்தடுப்பதிலும், நிலத்தடி நீராதாரத்தைப் பாதுகாப்பதிலும் சிறந்த இடம் பிடிப்பதுடன், அடி முதல் நுனி வரை மனிதர்களுக்கு பயன்படக்கூடியதாக உள்ள கற்பக தருவான பனை மரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பொன் முட்டையிடும் வாத்தை அறுப்பது போல பனை மரங்கள் வெட்டப்பட்டு செங்கல் சூளைகளில் எரிபொருளாக்கப்பட்டு வருகிறது. எனவே மாநில மரமான பனை மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் அரசு பல திட்டங்களை வகுத்து வருகிறது. கடந்த காலங்களில் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளின் கரைகளில் தன்னார்வலர்கள் மூலம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. பல இடங்களில் தற்போது அந்த பனை மரங்கள் துளிர்த்து வளர்ந்து வருகிறது. மேலும் இப்போது விவசாய நிலங்களில் பனை மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை மூலம் பனை விதைகள் வழங்கப்பட்டு வருகிறது.

பண்ணைக் குட்டைகள்

இதுகுறித்து குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:-

குடிமங்கலம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு 100 சதவீ்தம் மானியத்தில் வழங்கும் வகையில் 2 ஆயிரம் பனை விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மண் அரிப்பால் நீர் நிலைகள் பாதிக்கப்படுவதைத் தவிர்த்து நீர் நிலைகளைப்பாதுகாக்கும் வகையில் பனை மரங்கள் வளர்க்கப்படுவது வழக்கமாகும். அதுபோல விவசாய நிலங்களில் உள்ள பண்ணைக் குட்டைகளைச் சுற்றி பனை மரங்களை வளர்த்து பயனடையலாம். மேலும் வேலிப்பயிராகவோ, தனிப்பயிராகவோ பனை மரங்களை வளர்ப்பதன் மூலம் விவசாயிகள் பலவிதமான நன்மைகளைப் பெறலாம்.

தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மண்ணின் ஈரப்பதம் போதுமான அளவில் உள்ளது. இது பனை விதைகள் நடவு செய்ய சிறந்த தருணமாக இருக்கும். எனவே பனை விதைகள் தேவைப்படும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் குடிமங்கலம் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம். இலவசமாக வழங்கப்படும் பனை விதைகளை ஒரு விவசாயிக்கு 50 என்ற எண்ணிக்கையில் உடனடியாக பெற்றுச்செல்லலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story