மானிய விலையில் பப்பாளி நாற்றுகள்


மானிய விலையில் பப்பாளி நாற்றுகள்
x

மானிய விலையில் பப்பாளி நாற்றுகள்

திருப்பூர்

போடிப்பட்டி,

மடத்துக்குளம் வட்டாரத்தில் மானிய விலையில் பப்பாளி நாற்றுகள் வினியோகம் செய்யப்படுகிறது.

ஒட்டு ரகம்

மடத்துக்குளம் வட்டாரத்தில் தோட்டக்கலைப் பயிர்களான காய்கறிகள் மற்றும் பழ வகைகள் அதிக அளவு பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் குறைந்த செலவு, குறைந்த காலம், குறைந்த தண்ணீர், அதிக லாபம் கொடுக்கும் பப்பாளி சாகுபடியை விவசாயிகள் விரும்புகின்றனர்.பப்பாளி இலைச்சாறு சிறந்த பூச்சி விரட்டியாகவும், பப்பாளிப் பழம் அதிக அளவு மருத்துவ குணமும் கொண்டதாக உள்ளது பப்பாளி சாகுபடியை ஊக்குவிக்க தோட்டக்கலைத் துறை மூலம் மானிய திட்டங்களும், வழிகாட்டல்களும் வழங்கப்பட்டு வருகிறது.இது குறித்து மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது:-

இயற்கை உரங்கள்

ஒரு ஏக்கருக்கு 900 முதல் 1000 வரை பப்பாளி நாற்றுகள் தேவைப்படும். தரமான நாற்றுகளாக தேர்வு செய்து வாங்கி, அவற்றை 6 அடிக்கு 6 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்கு குழி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழியிலும் ஒரு கிலோ நுண்ணுயிர் கலவையை இட்டு நிரப்பி நாற்றுக்களை நடவு செய்து, மண் அணைக்க வேண்டும்.தேவையான அளவு வட்டப்பாத்தி அமைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.நேரடி பாசனத்தை விட சொட்டு நீர்ப் பாசனம் சிறந்ததாகும்.நடவு செய்த 20 ஆம் நாளில் களை எடுத்து தழை, மணி, சாம்பல் சத்துக்கள் அடங்கிய உரத்தை ஒரு ஏக்கருக்கு 150 கிலோ என்ற அளவில் கொடுக்க வேண்டும். பூச்சி, நோய் தாக்குதல் ஏற்படாமல் பராமரிக்க வேண்டியது அவசியமாகும். மழை நீர் தேங்கி நிற்காதபடி வடிகால் வசதி செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

மானியம்

புதிதாக பப்பாளி பயிர் செய்யும் விவசாயிகளுக்கு மடத்துக்குளம் வட்டாரத்தில் ரெட்லேடி பப்பாளி நாற்றுகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.இந்த ஆண்டில் வட்டாரத்தில் 12.5 ஏக்கருக்கு 5560 பப்பாளி நாற்றுகள் வழங்கப்பட உள்ளது.இதற்கான ரூ. 1 லட்சத்து 15 ஆயிரத்து 600 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.விவசாயிகளுக்கான பப்பாளி நாற்றுகள் சங்கராமநல்லூரில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்படும்‌.இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், உரிமைச் சான்று, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, 2 புகைப்படம் ஆகியவற்றுடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் https://www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விவசாயிகளே நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story