கள்ளக்குறிச்சியில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 2026-ம் ஆண்டு பா.ம.க. ஆட்சியை அமைக்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேச்சு
2026-ம் ஆண்டு பா.ம.க. ஆட்சியை அமைக்கும் என்று கள்ளக்குறிச்சியில் நடந்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.
கள்ளக்குறிச்சியில் நேற்று மாலை, பா.ம.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கவுரவ தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தமிழ்வாணன் முன்னிலை வகித்தார். கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் ராஜா வரவேற்றார்.
கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு, நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மக்களுக்கு நம்மீது நம்பிக்கை
தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் களம் நமக்கேற்றதாக அமைந்து கொண்டிருக்கிறது. தி.மு.க. தொடங்கி 18 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்தது. அதேபோல் அ.தி.மு.க. 6 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்தது. ஆனால் பா.ம.க. 37 ஆண்டுகளாகியும் ஆட்சிக்கு வர முடியவில்லை என்பது எனக்கு மிகப்பெரிய வருத்தமாகும். நமக்கு எல்லா தகுதியும் உண்டு. எல்லாத்துக்கு மேல் தமிழ்நாட்டில் அதிக இளைஞர்கள் நம் கட்சியில் தான் இருக்கிறார்கள்.
மக்களுக்கு நம்மீது தற்போது நம்பிக்கை வந்து கொண்டுள்ளது.
அடுத்ததாக 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பா.ம.க. ஆட்சி அமைக்கும். புதிய நிர்வாகிகள் பழைய நிர்வாகிகளை ஒதுக்காமல் அவர்களை அரவணைத்து, அவர்களிடம் ஆலோசனை கேட்டு ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
ஒன்றிய செயலாளர்கள் கிராமத்தில் தான் இருக்க வேண்டும். அங்கு, கட்சி கொடியேற்றி, கிளை திறக்க வேண்டும்.
அதேபோல் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் கட்சி கொடியேற்றி கிளையை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு தொகுதிக்கும் 3 நாட்கள் கிராமங்கள் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.
ஒரே அணியில் செயல்படுவோம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பா.ம.க.வினர் மீது வழக்கு போடுவதை காவல்துறையினர் நிறுத்த வேண்டும். உளுந்தூர்பேட்டை-சேலம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 136 கிலோமீட்டர் தொலைவில் 98 கிலோ மீட்டர் நான்கு வழிச்சாலையாகவும், 8 இடங்களில் 38 கிலோமீட்டர் தொலைவு வரை இரண்டு வழி சாலைகளாகவும் உள்ளது. இதனால் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 1,050 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலஆயிரக்கணக்கானோர் கை, கால் மற்றும் மூளை இழந்து உள்ளனர்.
எனவே விரைந்து அனைத்து இடங்களிலும் நான்கு வழி சாலை அமைக்க வேண்டும்.
இது தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசி உள்ளேன். அதேபோல் மத்திய மந்திரியிடம் கடிதமும் கொடுத்துள்ளேன். நாம் அனைவரும் ஒரே அணியில் செயல்படுவோம் வெற்றி பெறுவோம். 2026-ல் தமிழ்நாட்டில் பா.ம.க ஆட்சி அமைப்போம் என உறுதி ஏற்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் கே.பி. பாண்டியன், கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட செயலாளர் தமிழரசன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.டி.ராமு, வடிவேல், மாவட்ட நிர்வாகிகள் ஜெகன், அறிவழகன், பாண்டியன், ராஜேந்திரன், முருகன், அண்ணாமலை, அய்யனார், மணிராஜ், பாலாஜி, பழனிசெல்வகுமார், மாவட்ட துணைச் செயலாளரும், புகைப்பட்டி ஒன்றிய கவுன்சிலருமான செந்தில், மாவட்ட துணை செயலாளர் ஏழுமலை, திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.ராஜ்குமார், நிர்வாகி ஏ.எஸ்.வாசன், பப்லு, முன்னாள் மாநில துணை தலைவர் ரமேஷ், நிர்வாகிகள் ராமச்சந்திரன், முத்துவேல் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பல கோடி ஊழல்
பின்னர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
60 கிலோமீட்டர் தொலைவிற்குள் உள்ள சுங்கச்சாவடியை அகற்றுவதாக மத்திய அமைச்சர் கூறினார். ஆனால் இதுவரை சுங்கச்சாவடி அகற்றாமல் அதற்கு பதிலாக சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தி உள்ளார்கள்.இது தமிழக பிரச்சினை மட்டும் அல்ல இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் உள்ள பிரச்சினையாகும் உடனடியாக 60 கிலோமீட்டர் தொலைவிற்குள் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்.
ஏற்கனவே சுங்கச்சாவடியில் குறைந்த வாகனங்களை கணக்கில் காட்டியுள்ளனர்.ஆனால் தற்போது பாஸ்டேக் வந்த பிறகு அதிக வாகனங்களை கணக்கில் வந்துள்ளது. எனவே ஏற்கனவே பல கோடி ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழல் சம்பந்தமாக சி.பி.ஐ விசாரணை வைக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளேன். சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டும் என பா.ம.க சார்பில் பல வருடஙலகளாக கோரிக்கை வைத்து வந்தது.
அதன்படி விமான நிலையம் வருவது வளர்ச்சி திட்டமாகும். ஆனால் விமான நிலையம் அமைக்கும்போது பாதிக்காத வகையில் அரசு இடத்தில் அமைக்க வேண்டும். உப்பளம், செய்யூர் பகுதியில் அரசு இடம் இருக்கிறது. ஆனால் அந்த இடத்தை விட்டுவிட்டு வேறு இடம் தேர்வு செய்துள்ளனர். அவர்கள் தேர்வு செய்துள்ள இடத்தில் நீர்நில பிரச்சனை இருக்கிறது. நிலம் கையகப்படுத்தும் போது மக்களுக்கு பாதிக்காத வகையில் செயல்படுத்த வேண்டும்.