முருகன் கோவிலுக்கு 3 மணி நேரம் தாமதமாக காவடி எடுத்த போலீசார்


முருகன் கோவிலுக்கு 3 மணி நேரம் தாமதமாக காவடி எடுத்த போலீசார்
x

வேளிமலை முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து செல்ல போலீசாருக்கு திடீர் தடை விதிக்கப்பட்டதால் போலீஸ் நிலையத்தை இந்து அமைப்பினர் முற்றுகையிட்டனர். பின்னர் 3 மணி நேர தாமதத்திற்கு பிறகு போலீசார் காவடி எடுத்தனர்.

கன்னியாகுமரி

தக்கலை:

வேளிமலை முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து செல்ல போலீசாருக்கு திடீர் தடை விதிக்கப்பட்டதால் போலீஸ் நிலையத்தை இந்து அமைப்பினர் முற்றுகையிட்டனர். பின்னர் 3 மணி நேர தாமதத்திற்கு பிறகு போலீசார் காவடி எடுத்தனர்.

வேளிமலை முருகன் கோவில்

தக்கலை அருகே உள்ள குமாரகோவிலில் பிரசித்தி பெற்ற வேளிமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்ற விரதம் இருந்து காவடி எடுத்துச் செல்வது வழக்கம்.

அதுபோல் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் இருந்தே நாட்டில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், மக்கள் பசி பட்டினி இன்றி வாழவும், சண்டை சச்சரவு இன்றி நிம்மதியுடன் வாழவும் தக்கலை பொதுப்பணித்துறை, போலீஸ் நிலையம் சார்பில் வேளிமலை முருகனுக்கு அதிகாரிகள் காவடி எடுத்து செல்வார்கள். இந்த பாரம்பரிய மரபு தொன்று தொட்டு அரசு சார்பில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கோவிலில் அரசு சார்பில் கொண்டு செல்லப்படும் அபிஷேக பொருளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

போலீஸ் காவடிக்கு தடை

ஆனால் இந்த வருடம் போலீஸ் நிலையத்தில் இருந்து காவடி எடுத்து செல்லக்கூடாது என உயர் அதிகாரி வாய்மொழி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் நேற்றுமுன்தினம் இரவு போலீஸ் நிலையத்தில் காவடி எடுக்க பூக்களால் அலங்கரிக்கும் பணி நடைபெறவில்லை.

இந்த சம்பவம் இந்து அமைப்பினருக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் நள்ளிரவில் போலீஸ் நிலையத்தை திடீரென முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இந்து அமைப்பினர் போராட்டம்

பின்னர் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் இந்து அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போலீஸ் நிலையம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவான இடம். ஆகவே போலீஸ் நிலையத்தில் வைத்து காவடி கட்ட முடியாது என கூறியதாக தெரிகிறது.

இதை கேட்டு ஆவேசமடைந்த இந்து அமைப்பினர் பாரம்பரியமாக நடைபெறும் நடைமுறையை மாற்றக்கூடாது என தெரிவித்ததோடு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து அங்கு துணை சூப்பிரண்டு கணேஷ் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தியதோடு உயர் அதிகாரிகளுடன் பேசினார். ஆனால் இரவில் முடிவு எட்டப்படவில்லை. எனவே இந்து அமைப்பினர் அங்கிருந்து நகரவே இல்லை. போலீஸ் நிலைய வாசலிலேயே அமர்ந்திருந்தனர்.

இதனை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் இந்த பிரச்சினை குறித்து பா.ஜ.க.வினர் மாநில தலைமைக்கு தகவல் தெரிவித்து போராட்டத்தை தீவிரப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனால் போராட்டம் தீவிரமாகும் நிலைக்கு சென்றது.

காவடி எடுத்த போலீசார்

இதற்கிடையே கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் அங்கு விரைந்தார். அதன் பிறகு நேற்று காலை 8.30 மணிக்கு போலீஸ் நிலையத்தில் காவடியை பூக்களால் அலங்கரிக்கும் பணி தொடங்கியது. இதனை தொடர்ந்து தான் அங்கு சகஜ நிலை திரும்பியது.

பின்னர் காவடி கட்டும் பணி முடிந்து காலை 11 மணிக்கு போலீஸ் நிலையத்தில் இருந்து காவடி கோவிலுக்கு புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் நள்ளிரவில் தொடங்கிய பதற்றம் காலையில் முடிவுக்கு வந்தது.

மேலும் தக்கலை போலீஸ் நிலையத்தில் இருந்து நெத்தி பட்டம் கட்டிய யானை மீது பால்குடம் மற்றும் 2 பேர் புஷ்பகாவடியை எடுத்து சென்றனர். முன்னதாக காவடியில் வைத்து கொண்டு செல்லும் அபிஷேக பொருளை கலசத்தில் நிறைக்கும் நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி பெஞ்சமின் ஜோசப், குற்றவியல் நீதிபதிகள் மணிமேகலை, பிரவின் ஜீவா, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ், இன்ஸ்பெக்டர் நெப்போலியன், மத்திய அரசு வக்கீல் வேலு தாஸ், மாநில அரசு வக்கீல் ஜெகதேவ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முதலில் தடை, பிறகு அனுமதி போன்றவற்றால் 3 மணி நேரம் தாமதமாக போலீஸ் நிலையத்தில் இருந்து காவடி ஊர்வலம் புறப்பட்டது.

பொன்.ராதாகிருஷ்ணன்

ஊர்வலத்தை வழி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், மாவட்ட துணைத்தலைவர் ப.ரமேஷ், செயலாளர் உண்ணிகிருஷ்ணன் உள்பட ஏராளமான பா.ஜ.க., இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பினர் பங்கேற்றனர். அரசு துறைகளின் சார்பில் கொண்டு செல்லப்பட்ட காவடிகள் தக்கலை நகரை வலம் வந்த பிறகு குமாரகோவிலுக்கு புறப்பட்டு சென்றது.

இதேபோல் பத்மநாபபுரம், தக்கலை, திருவிதாங்கோடு, கேரளபுரம், பரைக்கோடு, வெட்டிகோணம், குமாரபுரம், வழிக்கலம்பாடு, முட்டைக்காடு, இரணியல் கோணம், முத்தலக்குறிச்சி, தென்கரை, பிரம்மபுரம் உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து நேற்று காலை முதலே விரதம் இருந்த பக்தர்கள் பறக்கும் காவடி, தொட்டில் காவடி, வேல் காவடி, புஷ்பகாவடி போன்ற பல்வேறு காவடிகள் கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

மேலும் தக்கலை பொதுப்பணித்துறை நீர் ஆதார பிரிவு அலுவலகத்தில் இருந்து காலை 8 மணிக்கு நெத்தி பட்டம் கட்டிய யானை மீது பால்குடமும், மூன்று பேர் புஷ்பகாவடியை எடுத்து வந்தனர். இந்த நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் கதிரவன், உதவி செயற்பொறியாளர் லாரன்ஸ், முன்னாள் உதவி செயற்பொறியாளர் மோகன்தாஸ் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த காவடி ஊர்வலத்தால் மதியம் 2 மணி வரை தக்கலை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இதற்கிடையே காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் காவடிகள் கோவிலுக்கு வந்த பிறகு மாலை 3 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் தொடங்கியது. முதலில் அரசு சார்பில் கொண்டு வந்த அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பொதுமக்களின் சார்பில் கொண்டு வந்த பொருட்கள் அபிஷேகம் செய்யப்பட்டு மாலை 4.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story