பள்ளிபாளையத்தில் 5¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்-ஒருவர் கைது


பள்ளிபாளையத்தில் 5¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்-ஒருவர் கைது
x

பள்ளிபாளையத்தில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிக்கு பின்னால் பதுக்கி வைத்திருந்த 5¼ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், அதை கடத்தியவரை கைது செய்தனர்.

நாமக்கல்

பள்ளிபாளையம்:

ரேஷன் அரிசி பறிமுதல்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சத்யாநகர் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பின்புறம் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 106 மூட்டைகளில் இருந்த சுமார் 5 ஆயிரத்து 300 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது

பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த சேட்டு என்கிற ராஜா (வயது 40) என்பவர் ரேஷன் அரிசி மூட்டைகளை வேனில் கடத்தி வந்து பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சேட்டு என்கிற ராஜாவை போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story