கன்டெய்னர் லாரியில் கடத்த முயன்ற 150 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
விழுப்புரத்தில் இருந்து மத்தூர் வழியாக பெங்களூருவுக்கு கன்டெய்னர் லாரியில் கடத்த முயன்ற 150 மூட்டை ரேஷன் அரிசியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
மத்தூர்:
விழுப்புரத்தில் இருந்து மத்தூர் வழியாக பெங்களூருவுக்கு கன்டெய்னர் லாரியில் கடத்த முயன்ற 150 மூட்டை ரேஷன் அரிசியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
வாகன சோதனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரிசி கடத்தலை தடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஜெயச்சந்திரபானு ரெட்டி உத்தரவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று காலை மத்தூர் அருகே உள்ள பெரியஜோகிப்பட்டி பிரிவு சாலையில் கிருஷ்ணகிரி பறக்கும் படை தாசில்தார் இளங்கோ மற்றும் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை அலுவலர்கள் நிறுத்தினர். ஆனால் லாரி நிற்காமல் சென்றது.
டிரைவர் கைது
இதையடுத்து அலுவலர்கள் விரட்டி சென்று லாரியை மடக்கி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அவர் வேப்பனப்பள்ளி அருகே உள்ள சின்ன கொத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமன் மகன் சரத்குமார் (வயது25) என்பது தெரியவந்தது. இவர் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பெங்களூருவுக்கு 150 மூட்டைகளில் 10 ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிந்தது.
இதையடுத்து அலுவலர்கள் ரேஷன் அரிசியுடன் கன்டெய்னர் லாரியை பறிமுதல் செய்து போச்சம்பள்ளி நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.
மேலும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட சரத்குமாரை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.