வக்கீல் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.33 கோடி பெருமாள் சிலை மீட்பு

விலைக்கு வாங்குவதுபோல் பேரம் பேசி வக்கீல் வீட்டில் பதுக்கி இருந்த ரூ.33 கோடி பெருமாள் சிலையை மாறுவேடத்தில் சென்று சிலை திருட்டு தடுப்புபிரிவு போலீசார் அதிரடியாக மீட்டனர்.
வக்கீல் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.33 கோடி பெருமாள் சிலை மீட்பு
Published on

விலைக்கு வாங்குவதுபோல் பேரம் பேசி வக்கீல் வீட்டில் பதுக்கி இருந்த ரூ.33 கோடி பெருமாள் சிலையை மாறுவேடத்தில் சென்று சிலை திருட்டு தடுப்புபிரிவு போலீசார் அதிரடியாக மீட்டனர்.

தொன்மையான உலோகச்சிலை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிலைகளை திருடி அவை தொன்மையான சிலைகள் எனக்கூறி ஏமாற்றி சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாக திருச்சி சிலை திருட்டு தடுப்புபிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க சென்னை சிலை திருட்டு தடுப்புபிரிவு டி.ஜி.பி.ஜெயந்த்முரளி, ஐ.ஜி.தினகரன் ஆகியோர் உத்தரவிட்டனர்.

இதனை தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான தனிப்படை போலீசார் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் சோதனை நடத்தி வந்தனர். அப்போது கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கோபிசெட்டிபாளையம் நாகர்பாளையம் வி.ஐ.பி. முத்துநகரை சேர்ந்த வக்கீல் பழனிச்சாமி (வயது 56) வீட்டில் 600 ஆண்டுகள் தொன்மையான பெருமாள் உலோகச்சிலை பதுக்கி வைத்து இருப்பதாகவும், அந்த சிலையை ரூ.33 கோடிக்கு விற்க இருப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

விலைக்கு வாங்க பேரம்

இதையடுத்து சிலை திருட்டு தடுப்புபிரிவு போலீசார் அந்த சிலையை ரூ.15 கோடிக்கு விலைக்கு வாங்குவதாக பேரம் பேசி அவருடைய வீட்டிற்கு கடந்த 7-ந் தேதி மாலை 4 மணி அளவில் மாறுவேடத்தில் சென்றனர். அங்கு அவரை சந்தித்து பேசியபோது, சிலையை வீட்டில் மறைத்து வைத்து இருப்பதாக கூறி, எடுத்து காண்பித்தார். பீடத்துடன் 58 செ.மீ. உயரம், 31 செ.மீ.அகலம் கொண்ட 22.800 கிலோ எடையுடன் இருந்த பெருமாள் சிலையை அதிரடியாக போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து அந்த சிலை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, யாரிடம் இருந்து அவர் பெற்றார் என அவரிடம் கேட்டபோது, பதில் கூற முடியாமல் தடுமாறினார். உடனே சிலையை திருச்சி சிலை திருட்டு தடுப்புபிரிவு அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். மேலும், இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. இது குறித்து சிலை திருட்டு தடுப்புபிரிவு போலீசார் தரப்பில் கூறியதாவது:-

காரில் சோதனை

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள ஒரு கோவிலில் பணிபுரிந்து வந்த பூசாரிக்கு கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த நடராஜன் என்ற வக்கீல் அறிமுகமாகி உள்ளார். பூசாரி ஏழ்மை நிலையில் இருந்ததால் அவருக்கு வக்கீல் நடராஜன் பண உதவி செய்துள்ளார். அதற்கு கைமாறாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகா கோவிலில் இருந்த தொன்மையான பெருமாள் சிலையை பூசாரி மூலமாக நடராஜன் வாங்கி காரில் வைத்து கொண்டு தமிழகத்துக்கு வந்துள்ளார்.

அவர் வரும் வழியில் கர்நாடகா போலீசார் அந்த காரை நிறுத்தி சோதனையிட்டு சிலையை கைப்பற்றினார்கள். இது குறித்து நடராஜன் மீது வழக்கும் பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அவர் சம்பந்தப்பட்ட சிலை தங்களது மூதாதையர்களால் தயாரிக்கப்பட்டது என்று கூறி போலி ஆவணங்களை தாக்கல் செய்து வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ரூ.50 கோடிக்கு விற்க முயற்சி

பின்னர் அந்த சிலையை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது ஜூனியர் வக்கீலான பழனிசாமியிடம் கொடுத்து ரூ.50 கோடிக்கு விற்க முயன்றுள்ளனர். விலை அதிகமாக இருந்ததால் சிலையை வாங்க யாரும் முன்வரவில்லை. அதனால் ரூ.33 கோடிக்கு விற்க முடிவு செய்தனர். இதற்கிடையே கடந்த 2018-ம் ஆண்டு வக்கீல் நடராஜன் இறந்து விட்டதால், மேற்படி சிலை வக்கீல் பழனிசாமியிடம் இருந்துள்ளது. அவர் அந்த சிலையை தரகர் மூலமாக ரூ.33 கோடிக்கு விற்க திட்டமிட்டு, சிலை திருட்டு தடுப்புபிரிவு போலீசாரிடம் சிக்கி கொண்டார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும், மீட்கப்பட்ட உலோகச்சிலை எந்த வகையான மெட்டலால் செய்யப்பட்டது என தொல்லியல்துறை ஆய்வுக்குட்படுத்தப்பட உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சிலை திருட்டு தடுப்புபிரிவு போலீசார் வக்கீல் பழனிசாமியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com