முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு
நீர்வரத்து குறைந்ததால் முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.
தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை உள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது. கடந்த வாரம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. அதாவது அணையில் இருந்து வினாடிக்கு 511 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆனால் தற்போது நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், அணைக்கான நீர்வரத்தும் குறைந்தது. இதையொட்டி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் நேற்று குறைக்கப்பட்டது. அதன்படி, அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 511 கன அடியில் இருந்து 400 கன அடியாக குறைக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 118.85 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 415 கன அடியாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் நேற்று காலை முதல் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் மின்சாரம் உற்பத்தியும் சரிந்தது. அதன்படி, ஒரு ஜெனரேட்டர் மூலம் 46 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தநிலையில், நேற்று மின்சாரம் உற்பத்தி 36 மெகாவாட்டாக குறைந்தது.