சுனை கருப்பசாமி கோவிலில் சாமி சிலை உடைப்பு


சுனை கருப்பசாமி கோவிலில் சாமி சிலை உடைப்பு
x

விராலிமலை சுனை கருப்பசாமி கோவிலில் சாமி சிலையை உடைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை

சுனை கருப்பசாமி கோவில்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் கோவில் தென்புறத்தில் சுனை கருப்பசாமி கோவில் உள்ளது. இக்கோவில் சுமார் 110 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. இங்கு கருப்பசாமி குதிரை மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலானது விராலிமலை பகுதி மக்களின் குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் விளங்கி வருகிறது.

இந்நிலையில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சாமி சிலை உடைப்பு

இதனையடுத்து மாலையில் கோவில் பூசாரி குருபிரசாத் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இந்நிலையில், வழக்கம்போல் இன்று காலை கோவிலை திறப்பதற்காக பூசாரி வந்தார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

மேலும் கோவிலில் இருந்த வேல் மற்றும் அரிவாள் உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பூசாரி உள்ளே சென்று பார்த்து போது, கோவிலின் கருவறையில் உள்ள கருப்பசாமி சிலையின் தலை பாகம் உடைக்கப்பட்டு கிடந்தது.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து அவர் விராலிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்ப சாமி கோவில் சிலையை உடைத்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story