மொபட்டில் புகுந்த பாம்பு
மொபட்டில் பாம்பு புகுந்தது.
கமுதி,
கமுதியில் அருப்புக்கோட்டை சாலையில் அரசு மருத்துவமனை மற்றும் மின்வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது. இப்பகுதியை சுற்றிலும் கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. இதன் எதிரே உள்ள குண்டாற்று கரைபகுதியிலும் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. இதனால் இங்குள்ள மின்வாரிய அலுவலகத்திற்குள் அடிக்கடி பாம்புகள் புகுந்து விடும் சம்பவம் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று கருங்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி அய்யனார் இவ்வழியாக மொபட்டில் சென்றபோது சாலையில் வந்த பாம்பு ஒன்று திடீரென அவரது இருசக்கர வாகனத்தில் புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மொபட்டை நிறுத்திவிட்டு இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சந்திரசேகரன் மற்றும் பார்த்திபன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வந்து மொபட்டின் பாகங்களை ஒவ்வொன்றாக பிரித்து உள்ளே இருந்த 3 அடிநீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை வனப்பகுதியில் விட்டனர்.