விளையாட்டு மைதானம் ரூ.63 லட்சத்தில்புதுப்பிக்கும் பணி மும்முரம்
திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானம் ரூ.63 லட்சத்தில் புதுப்பிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானம் ரூ.63 லட்சத்தில் புதுப்பிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
உடல் நலம்
மனிதன் தனது உடல் திறன்களை திடமாக்கி கொள்ளும், பரிசோதித்து கொள்ளும் களங்களில் விளையாட்டு முக்கியமானது. விளையாடுவதால் மனிதன் உடல் நலத்தையும், மனநலத்தையும் பெறலாம். விளையாடுவதால் ஒற்றுமை வளர்கின்றது. தொடர் பயிற்சிகளால் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவராகவும், நல்ல ஆரோக்கியம் உள்ள நபராகவும் மாறுகின்றனர். படிப்புகளில் கவனம் செலுத்த முடியும்.
இப்படி பல நன்மைகளை ஏற்படுத்தும் விளையாட்டுக்கள் நிச்சயம் ஒரு மாணவனின் முன்னேற்றத்திற்கு பெரிய அளவில் பங்கு விகிக்கின்றது. மாணவ-மாணவிகள் விளையாட்டில் சிறந்து விளங்குவதுடன், அவர்களது திறமையை வெளிக்கொண்டு வந்து மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் மட்டுமின்றி ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்க வைப்பதற்காக மாவட்டங்கள் தோறும் விளையாட்டு மைதானத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.
பொருளாதார இழப்பு
அதே போல் திருவாரூர் மருத்துவக்கல்லூரி அருகே மாவட்ட விளையாட்டு மைதானம் உள்ளது இதில் தடகள போட்டிகளான ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டுஎறிதல், ஈட்டி எறிதல் ஆகியவை விளையாடுவதற்கும் தனித்தனியாக இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன. 100 மீட்டர், 200 மீட்டர், 5 ஆயிரம் மீட்டர் போன்ற ஓட்டம் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் மண் தரையிலான ஓடுதளத்தில் தான் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.மாவட்ட அளவிலான போட்டிகளும் இதே ஓடுதளத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
ஆனால் இது போன்ற ஓடுதளத்தில் பயிற்சி பெற வேண்டுமானால் மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்களுக்கு பொருளாதார இழப்புகளும், கால நேரம் வீணாகி வருகிறது. இவ்வாறு வௌியூர்களுக்கு சென்று வருவதால் விளையாட்டில் இருக்க கூடிய ஆர்வம் குறைய வாய்ப்பு உள்ளது.
புதுப்பிக்கும் பணி
பெரு நகரங்களில் இருப்பது போல் திருவாரூரில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்று வீரர்-வீராங்கனைகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்த நிலையில், திருவாரூர் விளையாட்டு மைதானத்தை ரூ.62.85 லட்சத்தில் புதுப்பிக்கும் பணி கடந்த மாதம் (ஜனவரி) தொடங்கியது.
பொதுப்பணி துறையின் கட்டுபாட்டில் வரும் இந்த பணியின் போது விளையாட்டு மைதானத்தை வர்ணம் பூசுதல், விளையாட்டு உள் அரங்கத்தை புதுப்பித்தல், மேற்கூரை மாற்றுதல், கழிவறை சீரமைத்தல், குடிநீர் வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. மேலும் 400 மீட்டர் மைதானத்தில் செயற்கை இழை (சிந்தடிக்) ஓடுதளம் அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.