மாநில அறிவியல் கண்காட்சி போட்டி: ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு


மாநில அறிவியல் கண்காட்சி போட்டி: ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
x

மாநில அறிவியல் கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கரூர்

கரூர் சின்னாண்டான் கோவில் பகுதியில் ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவிகளான தனிஷ்கா, அனன்யா நிவாசினி ஆகியோர் ஹோம் ஆட்டமேஷன் சிஸ்டம் என்று அழைக்கப்படும் நவீன கருவியின் மாதிரியை கண்டுபிடித்துள்ளனர். இக்கருவியானது எரிவாயு உருளை தீருவதற்கு முன்பாகவே அத்தகவலை பயன்பாட்டாளருக்கு முன்கூட்டியே தெரிவிக்கிறது.

மேலும் எரிவாயுவை வழங்கும் முகவர்களுக்கும் குறுஞ்செய்தியை அனுப்பி மறு எரிவாயு உருளைக்கான முன்பதிவை செய்கிறது. மேலும் எரிவாயு உருளையில் இருந்து வாயு கசிவை தாமாகவே கண்டறிந்து உணர்த்தும் சென்சார் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் எரிவாயு கசிவின் மூலம் ஏற்படும் விபத்தை தடுக்கிறது. இந்நிலையில் மத்திய அரசின் மூலமாக இயக்கப்படும் அடல் இன்னவேட்டிவ் மிஷன் அமைப்பானது கடந்த ஆகஸ்டு மாதம் மாநில அளவில் அறிவியல் கண்காட்சி போட்டியை நடத்தியது. அப்போட்டியில் இப்படைப்பானது முதல் சுற்றில் தேர்வாகியது. மேலும் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறி சிறந்த 50 கண்டுபிடிப்புகளுள் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டு இறுதி சுற்றில் செயல் வடிவம் பெறுவதற்கான வாய்ப்பை பெற்றது. இதில் பங்கேற்று வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளையும், இதற்கு உறுதுணையாக இருந்த இயற்பியல் ஆசிரியர் சதீஷ் குமார் ஆகியோரை பள்ளி தாளாளர், செயலாளர், பள்ளி முதல்வர், துணை முதல்வர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.


Next Story